New Year ஆஃபர் கிடைக்காது போல.! LED டிவி விலை ஏறப்போகுதாம்! காரணம் தெரியுமா?
உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, 2026 ஜனவரி முதல் டிவி விலை 10% வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், விலை உயர்வுக்கு முன்பே டிவி வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

“New Year Offer” என்பதே கனவாகி விடும் சூழல்
புதிய ஆண்டை முன்னிட்டு டிவி வாங்கலாம் என்று திட்டமிட்டிருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் New Year, Pongal, Republic Day போன்ற காலங்களில் பெரிய தள்ளுபடிகளுடன் டிவிகள் விற்பனைக்கு வரும். ஆனால் 2026 ஜனவரி மாதம் தொடங்கி டிவிகளின் விலை உயர வாய்ப்பு அதிகம் என்று மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு “New Year Offer” என்பதே கனவாகி விடும் சூழல் உருவாகியுள்ளது.
சிப்புகளின் விலை உயர்வு
டிவி விலை உயர்வுக்கான முக்கிய காரணம் உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறை. ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தப்படும் DRAM, Flash Memory போன்ற சிப்புகளுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக Artificial Intelligence (AI), டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள் போன்ற துறைகள் அதிக அளவில் மெமரி சிப்புகளை பயன்படுத்துவதால், டிவி உற்பத்திக்கு தேவையான சிப்புகள் போதிய அளவு கிடைக்காமல் போகிறது. இதன் நேரடி விளைவாக சிப்புகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த டாலர் படுத்துற பாடு இருக்கே
இதற்குப் பிறகான இன்னொரு பெரிய காரணம் இந்திய ரூபாயின் பலவீனம். சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டிவிகளில் சுமார் 70% முக்கிய உதிரிப்பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. Open Cell, Motherboard, Memory Chip போன்றவை அனைத்தும் டாலர் அடிப்படையில் வாங்கப்படுவதால், ரூபாய் வீழ்ச்சி உற்பத்தி செலவை பல மடங்கு உயர்த்துகிறது.
Smart TVகளின் விலை 10% வரை உயரலாம்
இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால், LED மற்றும் Smart TVகளின் விலை 3% முதல் 10% வரை உயரலாம் என்று தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில பிராண்டுகள் ஏற்கனவே ஜனவரி மாதத்திற்குப் பிறகு விலை திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன. முன்பு GST குறைப்பு காரணமாக சில அளவு விலை தாழ்வு கிடைத்தாலும், தற்போது அந்த நன்மையை விலை உயர்வு முழுவதுமாக முந்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கு தயாராக இருப்பதே நிஜம்
மொத்தத்தில், புதிய ஆண்டு தொடக்கத்தில் டிவி வாங்க நினைப்பவர்கள் சலுகை கிடைக்கும் என எதிர்பார்ப்பதை விட, விலை உயர்வுக்கு தயாராக இருப்பதே நிஜம். ஆகையால் டிவி வாங்குவது அவசியம் என்றால், விலை உயர்வுக்கு முன்பே வாங்கிவிடுவது நல்ல முடிவாக இருக்கலாம். இல்லையெனில், “New Year Offer” என்ற வார்த்தையே இந்த ஆண்டு டிவி சந்தையில் காணாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

