- Home
- Business
- நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி! மளிகை, ஜவுளி விலை கண்டிப்பாக குறைய போகுது! ஆடிக்கு முன்பே தள்ளுபடியா?
நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி! மளிகை, ஜவுளி விலை கண்டிப்பாக குறைய போகுது! ஆடிக்கு முன்பே தள்ளுபடியா?
மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க பரிசீலித்து வருகிறது. 12% வரி அடுக்கு நீக்கப்படலாம் அல்லது 5%க்குக் குறைவாகக் கொண்டுவரப்படலாம். இதனால், பற்பசை, சமையல் பாத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை குறையும்.

குஷியோ !குஷியோ! என்ன சங்கதி தெரியுமா?
மத்திய அரசு தொடர்ச்சியாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் களமிறங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைய, ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றும் திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதில் 12 சதவீத வரி அடுக்கில் பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. அந்த வரி காரணமாக, ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவில் பெரிதும் பாரம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு நிச்சயமாக நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய ஆலோசனை என்ன?
தற்போது பரிசீலனை நடப்பது இரண்டு வகையில்
- 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்குவது.
- 12 சதவீத வரியில் உள்ள பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மாற்றுவது.
இந்த மாற்றங்களில் எது உறுதி செய்யப்பட்டாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் உறுதி என்றே கூறலாம். காரணம், இப்போது 12 சதவீத ஜிஎஸ்டி கட்ட வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் வாங்கும் அத்தியாவசியங்கள்.
விலை குறையப் போகும் முக்கிய பொருட்கள்
இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சிறிய சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 வரை விலை கொண்ட ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள், விவசாய கருவிகள் போன்றவை மலிவாகக் கிடைக்கும். இவை அனைத்தும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் என்பதால், விலை குறைப்பு நேரடி நன்மையை தரும். ஒரு குடும்பம் மாதம் இந்த பொருட்களில் எதாவது ஒன்றையாவது வாங்கும் சூழல் காணப்படுகிறது. அதனால் செலவுகள் தாராளமாக குறையும்.
ஏன் இப்போது இந்த முடிவு?
அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. விலைவாசி உயர்வு பொதுமக்கள் மனதில் தவறான கருத்தை உருவாக்கும். அதனை சமநிலையில் வைத்திருக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறவும், அரசு இத்தகைய முடிவை விரைவாக எடுத்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நடைபெறுவதுடன், வரி வசூலையும் சீரமைப்பது தேவையான சூழலாக உருவாகியுள்ளது. இதற்காகவே, ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் இறுதி முடிவு
இந்த முன்மொழிவு தற்போது ஆலோசனை நிலையில் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்யவேண்டும் என்பதால், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.இந்த வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தால், 2017ல் ஜிஎஸ்டி அறிமுகமானபின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று இது ஆகும். நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் நன்மை, அவர்களது தினசரி வாழ்க்கையை தாங்குதலாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.