ரூ.40,000 கோடி சொத்தை உதறி தள்ளி விட்டு துறவியாக வாழும் மலேசிய இளம் கோடீஸ்வரர்! யார் இவர்?
மலேசிய கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணனின் மகன் வென் அஜான் சிரிபான்யோ, 5 பில்லியன் டாலர் சொத்துக்களை உதறிவிட்டு துறவற வாழ்க்கையைத் தழுவியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து-மியான்மர் எல்லையில் வனத் துறவியாக வாழ்ந்து வருகிறார்.
Ajahn Siripanyo
அதிக பணம் சேர்த்து பணக்காரராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதிலும் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் மேலும் தங்கள் சொத்துக்களை சேர்க்கவே விரும்புவார்கள். இப்படி அதிகமாக சொத்து சேர்த்து ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கும் கோடீஸ்வரர்களுக்கு மத்தியில் ஒரு கோடீஸ்வரர் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு, காட்டில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்..
ஆம். மலேசிய கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான வென் அஜான் சிரிபான்யோ, துறவற வாழ்க்கையை தழுவுவதற்காக 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 40,000 கோடி) மதிப்பிலான சொத்துக்களை உதறிதள்ளி உள்ளார்.
Ajahn Siripanyo
மலேசியாவின் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன், தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், எண்ணெய், ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகங்கள் என பரந்துபட்ட வணிக சாம்ராஜ்யத்தை வைத்திருக்கிறார்.
யார் இந்த வென் அஜான் சிரிபன்யோ?
பிறக்கும் போதே கோடீஸ்வராக பிறந்த அஜான் சிரிபான்யோ தனது 18வது வயதில் புத்த துறவியாக மாறுவதற்கான வாழ்க்கையை மாற்றும் முடிவை எடுத்தார். இந்த முடிவு, வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், அவரின் தந்தையும் புத்த மதத்தில் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே புத்த மதத்தின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார்.
Ajahn Siripanyo
எனினும் புத்த மதத்தின் துறவியாக வேண்டும் என்பது அஜான் சிரிபான்யோவின் தனிப்பட்ட முடிவும் என்றும், அவரின் இந்த முடிவை அவரின் குடும்பத்தினர் மதித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிரிபான்யோவின் தாயார், மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன், தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்..
Ajahn Siripanyo
ஒரு வன துறவியின் வாழ்க்கை
20 ஆண்டுகளுக்கும் மேலாக, வென் அஜான் சிரிபான்யோ ஒரு வனத் துறவியாக வாழ்ந்து வருகிறார், முதன்மையாக தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள தாவோ டம் மடாலயத்தில் வசிக்கிறார். செல்வத்தை துறந்து, எளிமையாக வாழ்வது என்ற புத்த மதத்தின் கொள்கையை அவர் பின்பற்றுகிறார்.
துறவு வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், சிரிபான்யோ அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்கிறார். தனது தந்தையையும் அவ்வப்போது தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். இருப்பினும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வருவதும், குடும்ப உறவுகளை வலியுறுத்தும் புத்த மத கொள்கைகளுடன் இணக்கமாக உள்ளன.
Ajahn Siripanyo
லண்டனில் தனது இரண்டு சகோதரிகளுடன் சேர்ந்து வளர்ந்த சிரிபான்யோ இங்கிலாந்தில் தனது கல்வியை முடித்தார். இவர் சுமார் 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அவரின் இந்த கலாச்சார வெளிப்பாடு அவரது உலகக் கண்ணோட்டத்தை வடிவமைத்தது. மேலும் புத்த மத போதனைகள் பற்றிய அவரின் புரிதலையும் ஆழமாக்கியது. அஜான் சிரிபான்யோவின் பயணம், பொருள் செல்வத்தை விட ஆன்மீக பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கான அரிய நிஜ வாழ்க்கைக்கு சான்றாக உள்ளது.