ரூ.1000 க்கு 7.5 சதவீதம் வட்டி! சிறப்பு சேமிப்புத் திட்டம்... பெண்களுக்கு மட்டும்!
மகளிர் கெளரவ சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கான இத்திட்டத்தில் ஒரே தவணையாக ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
மகளிர் கெளரவ திட்டம் என்ற சிறப்பு சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கியது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படுவதாக நிதி அமைச்சகம் சொல்கிறது.
கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த சேமிப்புத் திட்டம் தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே இந்தத் திட்டம் அமலில் இருக்கும்.
அனைத்துப் பெண்களும் இத்திட்டத்தில் சேரலாம். பெண் குழந்தைகள் சார்பாக அவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.5 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. காலாண்டு தோறும் வட்டி கணக்கில் செலுத்தப்படும்.
குறைந்தபட்சமாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்யலாம். விருப்பான தொகையை ஒரே தவணையாக டெபாசிட் செய்ய வேண்டும்.
தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் கணக்கு முதிர்வு அடையும். கணக்கு தொடங்கி 6 மாதம் கடந்த பின் அவசரத் தேவை ஏற்பட்டால் முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
சென்னை நகரப் பிராந்தியத்தில் இத்திட்டம் தொடங்கிய 10 நாட்களில் 840 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.11.72 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தபால் நிலையத்திலும் மகளிர் கெளரவ திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.