நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிறந்த Small Cap ஃபண்ட்கள்.. டாப் 3 லிஸ்ட் இதுதான்!
சிறிய நிறுவன பங்குச்சந்தை நிதிகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்றாலும், நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரக்கூடியவை. முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

சிறந்த வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள்
பல முதலீட்டாளர்கள் தற்போது மியூச்சுவல் பண்ட்களில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சிறிய நிறுவனம் (Small Cap) பங்குச்சந்தை ஃபண்ட்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. நிஃப்டி ஸ்மால் கேப் 250 குறியீட்டின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் CAGR 28.1% எனும் கனிசமான வளர்ச்சி உள்ளது. இது மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் பங்குகளை விட உயர்ந்த அளவாகும்.
நீண்டகால முதலீடு
சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, சிறிய நிறுவன நிதிகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் கொண்டது. ஆனால், வருமானத்தைப் பார்க்கும்போது, இந்த வகை நிதிகள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. குறுகிய காலத்திலான ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், 8-10 ஆண்டுகள் நீண்டகால முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்
முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் முன்னணி மூன்று நிதிகளில் முதன்மையானது நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட். இது 2010 முதல் வருகிறது. 235க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள இந்த நிதியின் AUM ரூ.65,900 கோடிக்கும் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் SIP மூலம் வருமானம் 24.31% அளித்துள்ளது. மாதம் ரூ.10,000 SIP முதலீடு செய்திருந்தால், இன்றைக்கு சுமார் ரூ.43.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்
அடுத்ததாக பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட், இது 2020இல் அறிமுகமானது. தற்போது ரூ.14,000 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன், சுகாதாரம் மற்றும் சில்லறை விற்பனையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் SIP வருமானம் 29.3%, 5 ஆண்டுகளில் ரூ.10,000 முதலீட்டில் சுமார் ரூ.12.3 லட்சம் கிடைத்துள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்
மூன்றாவது இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகும். இது 2018இல் தொடங்கப்பட்டு, ரூ.75,000 கோடி மதிப்பிலான AUM-ஐ கொண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் அதிக முதலீடு செய்துள்ள இந்த நிதி, கடந்த 5 ஆண்டுகளில் SIP அடிப்படையில் 27.58% வருமானம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.10,000 முதலீடு செய்தவர்கள் இன்று சுமார் ரூ.11.8 லட்சம் வருமானம் பெற்றுள்ளனர். பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் அபாயம் கொண்டவை. எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.