60 வயசுக்கு முன்னாடி NPS-ல கை வச்சா நஷ்டமா? பணம் எடுக்குறதுக்கு முன்னாடி இதைப் படிங்க!
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஓய்வுபெறும்போது முழுப் பணத்தையும் எடுக்க முடியுமா என்பது உங்கள் சேமிப்புத் தொகையைப் பொறுத்தது. உங்கள் சேமிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், 60 வயதில் முழுத் தொகையையும் எடுக்கலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)
மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சேர்ந்துள்ள அரசு சாரா ஊழியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய குழப்பம், "ஓய்வுபெறும்போது மொத்தப் பணத்தையும் எடுக்க முடியுமா?" என்பதுதான். இதற்கு எளிமையான பதில், "உங்கள் சேமிப்புத் தொகையைப் பொறுத்தே இது அமையும்" என்பதுதான்.
NPS விதிகளின்படி, உங்கள் முதிர்வுத் தொகையை எப்படிப் பெறலாம் என்பதன் முழு விவரம் இதோ.
60 வயதில் ஓய்வுபெறும்போது (Standard Exit)
நீங்கள் 60 வயதை எட்டும்போது, உங்கள் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில்:
• 60 சதவீதம்: மொத்தமாக (Lump sum) கையில் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு வரி கிடையாது.
• 40 சதவீதம்: கட்டாயமாக 'அனுவிட்டி' (Annuity) திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு மாதந்தோறும் பென்ஷனாக வரும். இந்த பென்ஷன் தொகைக்கு வரி உண்டு.
60 வயதிற்கு முன்பே வெளியேறினால்
உங்கள் NPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் 40 சதவீத விதியைத் தவிர்க்கலாம். அதாவது, முழுப் பணத்தையும் (100%) ஒரே நேரத்தில் கையில் வாங்கிக்கொள்ளலாம். பென்ஷன் திட்டம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
திட்டமிடாமல் 60 வயதிற்கு முன்பே பணத்தை எடுக்க நினைத்தால் விதிகள் கடுமையாக இருக்கும்.
• உங்கள் சேமிப்பு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், 80 சதவீதப் பணத்தில் பென்ஷன் திட்டம் வாங்க வேண்டும். 20 சதவீதத்தை மட்டுமே கையில் தருவார்கள்.
• மொத்தச் சேமிப்பு ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், முழுப் பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை சந்தாதாரர் இறக்க நேரிட்டால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு (Nominee) முழுத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும். இதில் பென்ஷன் திட்டம் வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
75 வயது வரை தள்ளிப்போடலாம்!
உங்களுக்கு 60 வயதில் பணம் தேவையில்லை என்றால், பணத்தை எடுப்பதையோ அல்லது பென்ஷன் வாங்குவதையோ 75 வயது வரை தள்ளிப்போடலாம் (Deferment). இது உங்கள் பணம் சந்தை முதலீட்டில் தொடர்ந்து வளர உதவும்.
உங்கள் 60 வயதிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் சேமிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கிடுங்கள். அது 5 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே நீங்கள் பென்ஷன் திட்டத்தில் சேர வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
