குஷியோ குஷி.! தங்கம் விலை இன்னும் இவ்வளவு குறையுமா.? அடித்து கூறும் நகை வியாபாரிகள்
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சரிந்து வருகிறது. சவரனுக்கு 70,000 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமணங்கள் உள்ளிட்ட விஷேச நாட்களில் அதிகளவு தங்க நகைகளை அணிய மக்கள் விரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
இதனால் திருமண தேவைக்காக தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் தவித்தனர். மேலும் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் விலை உயர்வால் நகைக்கடைகளில் தங்கத்தை வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை உருவானது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது.
நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்துள்ளது. அக்க்ஷய திருதியைக்கு பிறகு தொடர்ந்து சரிவை கண்டு வந்த தங்கம் விலையானது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.
அடுத்த ஒரு சில தினங்களுக்கும் மேலும் தங்கம் விலை குறையும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் . இதனால் தங்கம் வாங்குவதற்கு இதுவே தங்கமான நேரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து மீண்டும் 70 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலை சரிந்துள்ளது.
சரிவை சந்தித்த தங்கம் விலை
இது தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் விலையானது உயர்வை சந்தித்தது. தற்போது வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தங்கம் விலை சரிந்து வருகிறது.
தங்கம் வாங்க நல்ல நேரம்
சீனா - அமெரிக்கா இடையே நடந்த வர்த்தக போரால் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சமரசமான நிலை ஏற்பட்டதையடுத்து ஆபரண தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் பங்குச்சந்தைகளில் முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவும் தங்கம் விலை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் .
இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து தங்கத்தின் விலை சரியும் என தெரிவித்த அவர், திடீரென தங்கம் விலை உயரத் தொடங்கி விட்டால் வரலாறு காணாத அளவிற்கு உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறினார் . எனவே தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே நல்ல நேரம் என்று தெரிவித்தார்.