- Home
- Business
- Indian Railways Revenue: ரயில் 1 கிமீ பயணிக்க இந்தியன் ரயில்வேக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
Indian Railways Revenue: ரயில் 1 கிமீ பயணிக்க இந்தியன் ரயில்வேக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
Indian Railways Revenue: இந்திய ரயில்வே தினமும் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், பராமரிப்புச் செலவும் மிக அதிகம். பயணிகளின் டிக்கெட்டுகளை விட, சரக்கு ரயில்கள் மூலமாகவே அதிக வருமானம் கிடைக்கிறது. 1 கி.மீ பயணிக்க ரயில்வேக்கு ஆகும் செலவு எவ்வளவு?

இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வே தினமும் 24 முதல் 25 ஆயிரம் ரயில்களை இயக்குகிறது. இதில் சாதாரண ரயில்கள், எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், அம்ரித் பாரத் என 13,500 முதல் 14,000 பயணிகள் ரயில்கள் அடங்கும். தினமும் 2 முதல் 2.5 கோடி பேர் இதில் பயணிக்கிறார்கள். இதுபோக, நிலக்கரி, சிமெண்ட், உரங்களை ஏற்றிச் செல்ல 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் ஓடுகின்றன.
ஆண்டு வருமானம் ரூ.2.74 லட்சம் கோடி
ரயில்வேயின் ஆண்டு வருமானம் சுமார் 2.74 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்த வருமானம் பயணிகள் டிக்கெட்டிலிருந்து வரவில்லை. மொத்த வருமானத்தில் 60 முதல் 62 சதவீதம் சரக்கு ரயில்கள் மூலமாகவே கிடைக்கிறது. அதாவது, சரக்கு ரயில்கள் மூலம் தினமும் ரூ.465 கோடி கிடைக்கிறது (இதில் நிலக்கரி மூலம் அதிக லாபம்). பயணிகள் ரயில்கள் மூலம் தினமும் ரூ.200 முதல் 232 கோடி (31%) மட்டுமே கிடைக்கிறது. மீதிப் பணம் பார்சல், விளம்பரம், பழைய இரும்பு விற்பனை மூலம் வருகிறது.
தினசரி பராமரிப்புச் செலவு ரூ.720 கோடி
இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை நிர்வகிக்க, தினமும் 690 முதல் 720 கோடி ரூபாய் வரை செலவாகிறது. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கே பெரிய தொகை போய்விடுகிறது. இதுதவிர மின்சாரம், டீசல், டிராக் பராமரிப்பு, சிக்னல் சிஸ்டம் என பல செலவுகள் உள்ளன. செலவைக் குறைக்க, ரயில்வே இப்போது சூரிய ஒளி போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
ரயில்வேயின் நிதி நிலைமை
ரயில்வேயின் நிதி நிலையைப் புரிந்துகொள்ள 'ஆபரேட்டிங் ரேஷியோ' (Operating Ratio) ரொம்ப முக்கியம். தற்போது இது 98.43 சதவீதமாக உள்ளது. அதாவது, 100 ரூபாய் சம்பாதிக்க ரயில்வே 98.43 ரூபாயைச் செலவு செய்கிறது. வரும் வருமானம் முழுவதும் பராமரிப்புக்கே போய்விடுவதால், இதை அதிக லாபம் தரும் பிசினஸ் என்று சொல்ல முடியாது.
ஒரு கி.மீ பயணிக்க ரூ.1.38 செலவு
இந்திய ரயில்வே வெறும் வியாபார நிறுவனம் கிடையாது. நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். ஒரு பயணியை ஒரு கிலோமீட்டர் அழைத்துச் செல்ல ரயில்வேக்கு சராசரியாக 1.38 ரூபாய் செலவாகிறது. ஆனால், பயணியிடம் இருந்து ரயில்வேக்குக் கிடைப்பது வெறும் 73 காசுகள் மட்டுமே. டிக்கெட் வருமானத்தை விட, பயணிகளுக்கான செலவே இங்கு அதிகம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

