சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு உணவு.. ரயில்வே சொன்ன குட் நியூஸ்.!
ரயில் பயணிகள் இப்போது டிக்கெட் முன்பதிவின் போது, கூடுதல் கட்டணமின்றி சர்க்கரை நோயாளிகளுக்கான சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த புதிய திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ரயில்வே புதிய விதி
இந்திய ரயில்வே சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது. இனிமேல் ராஜதானி, ஷதாப்தி, துரோந்தோ, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் டிக்கெட் பதிவு செய்யும் போதே பயணிகள் தங்களுக்கான உணவு வகையைத் தெரிவுசெய்ய முடியும். ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே
இந்தியா தற்போது “உலகின் சர்க்கரை நோய் தலைநகர்” என்று அழைக்கப்படும் நிலையில், நாட்டில் சுமார் 22 கோடி மக்கள் டைப்-2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி லான்செட் 2023 அறிக்கையின்படி, சீனாவில் 14.9 கோடி, அமெரிக்காவில் 4.2 கோடி நோயாளிகள் உள்ளனர். இதை சேர்த்தாலும் இந்தியாவின் எண்ணிக்கையை அடைய முடியவில்லை. இளைய தலைமுறையிலும் இந்த நோய் வேகமாக பரவி வரும் நிலையில், ரயில்வே இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
டயாபட்டிக் உணவு
ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, ராஜதானி, ஷதாப்தி, துரோந்தோ, வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து முன்பணம் வசூலிக்கும் ரயில்களிலும் இனிமேல் ஐந்து வகை உணவு விருப்பங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சைவம், அசைவம், ஜைன உணவு, சர்க்கரை நோயாளிகளுக்கான சைவ உணவு, சர்க்கரை நோயாளிகளுக்கான அசைவ உணவு ஆகியவை பயணிகளுக்குக் கிடைக்கும். இதன்மூலம் சர்க்கரை நோயாளிகள் தங்களின் உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொண்டு பயணம் செய்யலாம்.
உணவு வகை
மேலும், பயணிகள் உணவை வேண்டாம் என்ற விருப்பத்தையும் தெரிவுசெய்யலாம். டிக்கெட் பதிவு செய்யப்பட்ட பிறகு உணவு விருப்பத்தை மாற்றுவது சாத்தியமாகும். இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். உணவு அல்லது பானங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.