Dream11 / MPL யூஸ் பண்ணுறீங்களா? இனி 2% கூடுதல் கட்டணம்!
2026 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்களில், ஆன்லைன் கேமிங்கிற்கு 2% கூடுதல் கட்டணம் மற்றும் BookMyShow சலுகைகளுக்கான புதிய நிபந்தனைகள் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனியார் வங்கிகளில் முக்கியமான ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, தனது அனைத்து ரீடெய்ல் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் கட்டணங்கள், ரிவார்டு அமைப்பு, சலுகைகள் உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வங்கியின் தகவல்படி, பெரும்பாலான விதிமுறைகள் 2026 ஜனவரி 15 முதல் அமலுக்கு வரும். சில ரிவார்டு வரம்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் தினசரி செலவு பழக்கத்தை நேரடியாக பாதிக்கலாம் என்பதால், கார்டு வைத்திருப்பவர்கள் புதிய விதிகளை கவனமாக படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக ஆன்லைன் செலவுகள் செய்யும் பயனாளர்களுக்கு இந்த அப்டேட் முக்கியமாக இருக்கும். புதிய விதிகளில் அதிக கவனம் பெறுவது ஆன்லைன் கேமிங் பரிவர்த்தனை தொடர்பான கட்டணமாகும். Dream11, Rummy Culture, Junglee Games, MPL போன்ற தளங்களில் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பரிவர்த்தனை செய்தாலோ இனி கூடுதலாக 2% கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் எதிர்காலத்தில் கேமிங் தொடர்பான புதிய வணிக வகை குறியீடு (MCC) சேர்க்கப்பட்டாலும் இந்த விதி பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது. பொழுதுபோக்கு சலுகைகளிலும் கட்டுப்பாடுகள் வந்துள்ளன. BookMyShow-வின் பிரபலமான BOGO (ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம்) ஆஃபர் பெற, கடந்த காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.25,000 செலவு செய்ய வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் Instant Platinum கார்டில் இந்த சலுகை பிப்ரவரி 2026 முதல் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில பிரீமியம் கார்டுகளில் வெளிநாட்டு பரிவர்த்தனை சார்ந்த கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Emeralde (Metal/Private/PVC) கார்டுகளில் Dynamic Currency Conversion (DCC) கட்டணம் 2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Emeralde Metal-க்கு புதிய add-on கார்டுக்கு ஒருமுறை ரூ.3,500 கட்டணம் செலுத்த வேண்டும். MakeMyTrip Travel, Times Black, Amazon Pay ICICI உள்ளிட்ட சில கார்டுகளில் DCC மார்க்அப் கட்டணங்களும் மாறியுள்ளதால், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலவு முறைகளை சரிபார்த்து கவனமாக பயன்படுத்துவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

