வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம் ஈசியா!
வீட்டுக்கடன் மாற்றம் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, தேவையான ஆவணங்களை தயார் செய்து, சாதகமான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். CIBIL மதிப்பெண் நல்ல நிலையில் இருந்தால் விரைவில் கடன் ஒப்புதல் கிடைக்கும்.

வீட்டுக்கடனை வேறு வாங்கிக்கு மாற்றும் வழிகள்
வீட்டு கடன் மாற்றம் (Home Loan Balance Transfer) என்பது தற்போதுள்ள வங்கியில் உள்ள கடனை, குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கும் மற்றொரு வங்கிக்கு மாற்றும் செயல்முறையாகும். இந்த செயல்முறை, ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை குறைத்த பிறகு, பல வங்கிகள் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் சூழ்நிலையில் மிகவும் பயனளிக்கக்கூடியதாக அமைகிறது. உங்களுக்குத் தற்போது கடன் கொடுத்துள்ள வங்கி, குறைந்த பட்ச வட்டி விகிதத்தை வழங்கவில்லை என நினைத்தால் உங்கள் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவதற்கு அது தொடர்பான அனைத்து நடைமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
வீட்டு கடன் மாற்றம் ஏன் ?
தற்போதைய வங்கியில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தாலோ மற்றொரு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் வீட்டுக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களின் மாத தவணையை (EMI) குறையும்
Bank to another Bank மாற்ற இப்படி செய்ய வேண்டும்
பல்வேறு வங்கிகளின் இணையதளங்கள் அல்லது பங்கீக கூட்டுச் சேவைகள் (loan aggregator portals) மூலம் தற்போதைய வீட்டு கடன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள். அதில் உங்களுக்கு திருப்தி இருக்கும் பட்சத்தில் வட்டி விகிதம் குறைவாக உள்ள வங்கியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். எல்லா வங்கிகளிலும் இந்த நடைமுறை ஆன்லைனிலும் உள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும், வீட்டு கடன் மாற்ற விண்ணப்பங்களை முன்னுரிமையுடன் கையாளுகின்றன.
மாற்ற கட்டணம் (Processing Fee)
வீட்டு கடன் மாற்றத்திற்காக சில வங்கிகள் சமாளிக்கும் கட்டணம் (processing fee) வசூலிக்கலாம். ஆனால் இது பேச்சுவார்த்தை மூலம் குறைக்கக்கூடியது, சில வங்கிகள் சிறப்பு சலுகையாக கட்டணத்தை விலக்கு அளிக்கவும் செய்கின்றன. இரண்டு மூன்று வங்கிகளில் விசாரணை செய்து பின்னர் நமக்கு சாதகமான நம்பகமான வங்கியை தேர்வு செய்யலாம். அரசு வங்கிகளில் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேவையான முக்கிய ஆவணங்கள்
ஆதார் அட்டை, பான் அட்டை, புகைப்படம், தற்போதைய முகவரி சான்று ஆகியவை கண்டிப்பாக தேவைப்படும். வருமான ஆவணங்கள், கடந்த 3 மாதங்களுக்கான சம்பள ரசீது, மற்றும் கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை அகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கான Form 16 மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களையும் வங்கியில் கொடுக்க வேண்டும்.
தற்போதைய வங்கியிலிருந்து பெற வேண்டியவை
கடன் ஒப்புதல் கடிதம் (Sanction Letter)
கடன் கணக்கு விவரங்கள்
சொத்து ஆவண பட்டியல்
கடன் நிறைவு கடிதம் (Foreclosure Letter)
முன்கூட்டியே கோரிக்கை வைக்க வேண்டும்
உங்களுக்கு கடன் வழங்கிய வங்கி நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடனை வேறு ஏதேனும் லோனுக்கு "நிபந்தனை" அடிப்படையில் சேர்த்திருந்தால் முன்கூட்டியே முழுக் கடன் தொகையையும் நீங்கள் செலுத்தினாலும் கூட உங்களை அக்கடனிலிருந்து முழுமையாக விடுவிக்காது. எனவே இதனை கவனத்தில் கொண்டு அதனை விடுக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
காசோலை கொண்டு செல்லுங்கள்
தற்போதுள்ள வங்கியில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எதுவும் மிச்சம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனைச் செலுத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும். லோனை முடிக்கப் போகும் போது கையோடு காசோலை புத்தகத்தைக் கொண்டு சென்றால் நல்லது. மீண்டும் மீண்டும் வங்கிக்கு செல்ல தேவையில்லை.
உதவி செய்யும் CIBIL ஸ்கோர்
உங்கள் CIBIL மதிப்பெண் நல்ல நிலையில் இருந்தால், வங்கிகள் விரைவில் கடனை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வாய்ப்பு அதிகம். வீட்டு கடன் மாற்றம் என்பது வட்டி விகிதத்தை குறைக்கும் சிறந்த வழியாகும். ஆனால், அனைத்து செலவுகளையும், ஆவண தேவைகளையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். சிறந்த வங்கி, குறைந்த வட்டி மற்றும் சலுகைகள் உள்ள இடத்தில்தான் மாற்றத்தை மேற்கொள்ளுங்கள்.