லாபத்தை அள்ளிக்கொடுக்குமா "வெள்ளி"? - வாங்கி குவிக்க ரெடியா?
தங்கத்திற்கு இணையாக வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை வெள்ளியில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் வெள்ளி மோகம்
தங்கத்தை போலவே அடித்தட்டு மக்கள் வெள்ளியிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். வெள்ளி ஆபரணங்கள் தற்போது தங்கம் நிறத்திலும் கிடைப்பதால் அதன் விற்பனை பலமடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு நகை கடைகளில் தங்கத்தை போலவே வெள்ளி பொருட்களுக்காகவும் சீட் கட்டும் முறை தொடங்கப்பட்டுள்ளது. திருமணத்தில் வழங்கப்படும் சீரில் தங்கத்தில் அடுத்த இடத்தில் வெள்ளி பொருட்கள் இடம் பெற்றுள்ளன. குத்துவிளக்கு,வெள்ளி தட்டுக்களில் தொடங்கி கொலுசு, மோதிரம மற்றும் தோடு, மூக்குத்தி என எல்லா ஆபரணங்களும் திருமண சீர்வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
லாபத்தை அள்ளித்தரும் வெள்ளி
தங்க பிஸ்கட்களை போலவே வெள்ளி பார்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறும் நகைகடை உரிமையாளர்கள் எதிர்கால முதலீட்டுக்கு வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் வெள்ளியானது வெறும் 15% வருமானத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதே கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளி 9% வளர்ச்சியைக் கண்டுள்ளது. தங்கமும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2015 – 2020 வரையிலான கால கட்டத்தில், வெள்ளி விலையானது 14 – 19 டாலர்களுக்குள்ளாகவே காணப்பட்டது. ஏப்ரல் 2020-ல் இருந்து மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிய வெள்ளி விலை, ஆகஸ்ட் 2020-க்குள்ளாகவே 28 டாலராக உச்சம் எட்டியது.
77 சதவீதம் லாபம் கொடுத்த வெள்ளி
இது இந்திய ரூபாயில் பார்க்கும்போது அந்தச் சமயத்தில் ஒரு கிலோவுக்கு 75,000 ரூபாயாக இருந்த வெள்ளி தற்போது 1.10 லட்சம் ரூபாய்க்கு மேலாகக் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியானது கடந்த 2022-ம் ஆண்டில் மீண்டும் 28 டாலரிலிருந்து 18 டாலருக்கு இறங்கியது. ஆனால், இன்றைய தேதியில் மீண்டும் 33 டாலரை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்தில் மட்டும் 77% லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டில் வெள்ளியை தேர்வு செய்வது அவசியம்
தங்கத்தைப் போல, வெள்ளி மீதான ஈர்ப்பும் சற்று அதிகம்தான். ஆனால், அதை வழக்கம்போல ஆபரணமாக, பார் ஆக வாங்காமல், வெள்ளி இ.டி.எஃப் ஆக வாங்க வேண்டும் என கூறும் சந்தை நிபுணர்கள் இதுவே முதலீட்டுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். வெள்ளியில் முதலீடு செய்தால் செலவுகள் குறைவு என்பதுடன் வருமானமும் சந்தை விலைக்கு ஏற்ப கிடைக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் வெள்ளியை 10% சேர்த்துக்கொள்வது மூலம் போர்ட்ஃபோலியோவின் லாபத்தை அதிகரிக்க முடியும்.
எப்போது வெள்ளியை வாங்கலாம்?
தற்போது நடுத்தட்டு மக்கள் முதலீடு செய்யக்கூடிய சிறந்த ஆப்ஷனாகப் வெள்ளி பார்க்கப்படுகிறது. 2025 மே 22-ம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.9,790 ஆகும். வெள்ளி 1 கிராம் விலை ரூ.112 ஆக உள்ளது. சமீபத்தில் டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட்நிறுவனம், தங்கம் மற்றும் வெள்ளி பற்றி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு இடையிலான விகிதம் எப்போதெல்லாம் 70-க்கும் அதிகமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் வெள்ளியை வாங்கலாம் எனவும் எப்போதெல்லாம் 70-க்குக் கீழாக இருக்கிறதோ, அப்போது தங்கத்தின் விலை உயர வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறியிருக்கிறது.
வெள்ளி சிறந்த முதலீடா?
கடந்த 1980-களில் 70 அவுன்ஸ் வெள்ளியைக் கொடுத்தால், 1 அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், இப்போது 2025-ல், சுமார் 100 அவுன்ஸ் வெள்ளியைக் கொடுத்தால்தான், 1 அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, தங்கம் விலை குறைய வேண்டும் அல்லது வெள்ளி விலை அதிகரிக்க வேண்டும். இன்றைய சூழலில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே. ஆக, வெள்ளி விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் தங்கத்தைக் காட்டிலும் வெள்ளியே சிறந்த முதலீட்டு ஆப்ஷனாகப் பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியை தேர்வு செய்து லாபம் ஈட்டுவது அதிகரித்துள்ளதாக கூறும் சந்தை நிபுணர்கள், அடித்தட்டு மக்கள் வெள்ளியை ஆபரணங்களாக வாங்கினாலும் அது நல்ல பலனை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.