- Home
- Business
- ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள். 21 வயதில் ட்ரோன் புரட்சி முதல் விண்வெளி ஜிபிஎஸ் வரை உருவாக்கும் இந்திய ஸ்டார்ட்அப்களின் கதையை பற்றி பார்போம்.

21 வயது இந்திய ட்ரோன் நிறுவனம்
பெங்களூரின் ஒரு சிறிய ஆய்வகத்தில், கணினித் திரையின் வெளிச்சத்திற்கு நடுவே 21 வயது இளைஞன் ஒருவன் விடிய விடிய உழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் உருவாக்குவது மற்றொரு உணவு டெலிவரி செயலியோ அல்லது ஆன்லைன் ஷாப்பிங் தளமோ அல்ல; உலக அளவில் 'கடைசி மைல் டெலிவரி'யின் (Last-mile delivery) செலவை அடியோடு மாற்றியமைக்கக்கூடிய முற்றிலும் தானியங்கி ட்ரோன் கட்டமைப்பு.
நம்மில் பலரும் நினைப்பது போல, இந்திய ஸ்டார்ட்அப் உலகம் என்பது வெளிநாட்டு மாடல்களை அப்படியே காப்பி அடித்து ஊருக்குள் ஓடவிடும் எளிய களம் அல்ல. அந்த பழைய பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, உலகின் மிகக் கடினமான அறிவியல் சவால்களைக் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டது இந்தியாவின் புதிய 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறை.
போஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருக்கும் ஜென்-இசட் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 37.7 கோடி ஆகும். இவ்வளவு பெரிய இளம் மனிதவளம் இந்திய வரலாற்றில் இதற்கு முன் இருந்ததே இல்லை. கையில் ஸ்மார்ட்போன், அசுர வேகத்தில் இயங்கும் ஏ.ஐ (AI) தொழில்நுட்பம், உலகளாவிய பார்வை ஆகியவற்றுடன் வளர்ந்த இந்த 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இந்திய வர்த்தகத்தின் இலக்கணத்தையே தலைகீழாக மாற்றி எழுதி வருகிறார்கள்.
வெளிநாட்டு மாடல்களின் நகல்களுக்கு முற்றுப்புள்ளி
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவான முதல் தலைமுறை ஸ்டார்ட்அப்கள் என்ன செய்தன? அமெரிக்காவின் அமேசானைப் பார்த்து ஃபிளிப்கார்ட் வந்தது; உபெர் காரைப் பார்த்து ஓலா உருவானது; ஈபே மாடலில் ஸ்னாப்டீல் முளைத்தது. வெளிநாடுகளில் வெற்றி பெற்ற வர்த்தக வழிகளை இந்திய மண்ணுக்குப் பொருத்துவதுதான் அன்றைய பெருங்கனவாக இருந்தது.
அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் வந்த இரண்டாம் தலைமுறையினர், இந்தியாவின் தனித்துவமான நடைமுறைகளுக்கு ஏற்ப சமூக வர்த்தகத் தளமான மீஷோ, மளிகைப் பொருட்களை மின்னல் வேகத்தில் கொடுக்கும் ஜெப்டோ, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வழிவகுத்த பேடிஎம் போன்ற உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்கும் நிறுவனங்களைக் கட்டி எழுப்பினார்கள்.
ஆனால், இன்றைய 3-ஆம் தலைமுறை இளைஞர்களின் திட்டம் முற்றிலும் மாறுபட்டது. ஏற்கனவே இருக்கும் ஒன்றை இந்தியாவில் மீண்டும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க முனைகிறார்களோ, அதே களத்தில் இறங்கி அவர்களைவிடச் சிறப்பாகத் தீர்ப்பதே எங்கள் நோக்கம்" என்று அடித்துச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த 'ஏர்பவுண்ட்' (Airbound) விண்வெளி நிறுவனத்தின் 21 வயது நிறுவனர் நமன் புஷ்ப். உள்ளூர் தேவைக்கான ஒரு தயாரிப்பாக இல்லாமல், உலகில் இருக்கும் எவரும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான் இவர்களது ஒரே இலக்கு.
ஜென் இசட் தொழில்முனைவோர்கள்
ஒரு காலத்தில் ஸ்டார்ட்அப் என்றாலே துணிகர முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் நிதியை அள்ளுவது, விளம்பரங்களுக்கு வாரியிறைப்பது, எப்படியாவது 'யூனிகார்ன்' (ஒரு பில்லியன் டாலர் மதிப்பு) அந்தஸ்தை எட்டிவிட்டு நிறுவனத்தை விற்றுவிட்டு வெளியேறுவது (Quick Exit) என்பதுதான் வெற்றிக்கான தாரக மந்திரமாக இருந்தது. ஆனால், புதிய தலைமுறை நிறுவனர்கள் அந்தப் பகட்டான பந்தயத்தை நிராகரிக்கிறார்கள். முதலில் கோடிகளைத் திரட்டிவிட்டு அப்புறம் நிறுவனத்தை உருவாக்கலாம் என்ற பழைய பாணியை மாற்றி, குறைந்த பணத்தில் வலிமையான தயாரிப்பை உருவாக்கி புத்திசாலித்தனமாக வளர வேண்டும் என்ற கொள்கையைக் கையில் எடுத்துள்ளார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால், நிதியைவிட நிறுவனத்தின் சொந்தத் தொழில்நுட்பமும் நீடித்த நிலைத்தன்மையும்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்துள்ளார்கள். லிங்க்ட்இன் (LinkedIn) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், இந்தியாவில் தங்கள் சுயவிவரப் பக்கத்தில் 'பவுண்டர்' (நிறுவனர்) என்ற பெயரைச் சேர்த்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 104% வரை எகிறியிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் 77% நிறுவனர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வருகையால்தான் தொடக்க முதலீடும் சிக்கல்களும் குறைந்து நிறுவனம் தொடங்குவது எளிதாகியுள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 73% ஜென்-இசட் நிறுவனர்கள் பல வழிகளில் வருமானம் ஈட்டிக்கொண்டே, ஏ.ஐயின் உதவியுடன் தங்கள் தொழில்களைப் பலமடங்கு விரிவுபடுத்துகிறார்கள்.
விண்வெளி ஜி.பி.எஸ் முதல் ஏ.ஐ கட்டமைப்பு வரை
இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. நுகர்வோர் இணைய வணிகத்தில் இருந்து ஆழமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு (Deep-tech) இளைஞர்களின் கவனம் நகரத் தொடங்கியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், 2018-ல் தொடங்கப்பட்டு பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான 'திகாந்தரா' (Digantara). பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளைக் கண்காணிக்கும் வகையில், விண்வெளிக்கான ஜிபிஎஸ் (GPS) போன்ற கண்காணிப்பு அமைப்பை இந்த நிறுவனம் கட்டமைத்து வருகிறது.
இந்நிறுவனத்தின் 27 வயது இணை நிறுவனர் அனிருத் சர்மா, முன்னெப்போதையும் விடத் தொழில்நுட்பத்தை மிக வேகமாக உருவாக்குவதே இன்றைய காலகட்டத்தின் பலம் என்பதைத் தீவிரமாக நம்புகிறார். சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையில், 360 ஒன், எஸ்.பி.ஐ வென்ச்சர்ஸ், ரோனி ஸ்க்ரூவாலா, பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ், கலாரி கேபிடல் ஆகியவற்றின் பங்கேற்புடன் 200 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 50 மில்லியன் டாலர் நிதியை இந்நிறுவனம் திரட்டியுள்ளது.
இதேபோல், 'ஸ்மாலஸ்ட் ஏ.ஐ' (smallest.ai) நிறுவனத்தின் 29 வயது இணை நிறுவனர் சுதர்ஷன் காமத், நிதி திரட்டல் இப்போது புதிய வடிவத்தை எடுத்துள்ளதாக விளக்குகிறார். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்காக செலவிடப்பட்ட பணம், இன்று ஏ.ஐ கணினி சேவையகங்களுக்கும் (AI Servers), டோக்கன்களுக்கும், அதிநவீன உள்கட்டமைப்பு கருவிகளுக்குமே செலவிடப்படுகிறது. மனிதர்களைக் குவித்து வேலை வாங்குவதை விட, அதிநவீன ஏ.ஐ கருவிகளை வைத்து மிகச் சிறிய குழுவுடன் பிரம்மாண்டத் தயாரிப்புகளை உருவாக்குவது சாத்தியமாகியிருக்கிறது.
நின்று நிலைக்கும் எதிர்காலம்:
விண்வெளி, பாதுகாப்பு, செமிகண்டக்டர் போன்ற அதிநவீனத் துறைகளில் ஒரு தயாரிப்பு முழுமை பெற பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் கூட ஆகலாம். சில ஆண்டுகளில் நிறுவனத்தை விற்றுவிட்டு வெளியேறும் மனநிலை இந்தத் துறைகளில் எடுபடாது.
அடுத்த தலைமுறைக்கும் நின்று நிலைத்து மனிதகுலத்தின் போக்கையே மாற்றி அமைக்கும் வலிமையான நிறுவனங்களை இந்திய மண்ணில் இருந்து உருவாக்குவதுதான் இவர்களது ஒட்டுமொத்த குறிக்கோள். விளம்பர வெளிச்சத்திற்குப் பின்னால் ஓடாமல் அறிவியல் சவால்களைக் கையில் எடுக்கும் இந்த இளம் தலைமுறை, உலகத் தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியாவை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.





