- Home
- Business
- துணி மடித்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்: சீனாவில் டிரெண்டாகும் ‘ரோபோ ட்ரைனர்’ வேலை; பின்னணி என்ன?
துணி மடித்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்: சீனாவில் டிரெண்டாகும் ‘ரோபோ ட்ரைனர்’ வேலை; பின்னணி என்ன?
சீனாவில் எதிர்கால பயன்பாட்டிற்கான ரோபோக்களுக்கு அன்றாட வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுக்கும் மனிதர்களுக்கு மாதம் ரூ.57,000 முதல் ரூ.85,000 வரை (4,000 - 6,000 யுவான்) சம்பளம் வழங்கப்படுகிறது.

துணி மடித்து மாதம் ரூ.85,000 சம்பாதிக்கும் சீனத் தொழிலாளர்கள்
துணி மடிப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை அன்றாட வீட்டு வேலைகளை ரோபோக்களுக்குக் கற்றுக்கொடுக்க, மனிதர்களுக்கு மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கும் விசித்திரமான வேலைவாய்ப்பு சீனாவில் பரவலாக உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக வீட்டு வேலைகளை ரோபோக்கள் தாங்களாகவே செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக, அவற்றின் ஆரம்பக்கட்ட பயிற்சித் தரவுகளை உருவாக்கும் பணியில் அந்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை முறை & எம்போடிட் ஏ.ஐ (Embodied AI)
ரோபோக்களுக்கான தரவுகளைச் சேகரிக்கும் இத்தொழில்நுட்பம் 'எம்போடிட் ஏஐ' (Embodied AI) என அழைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் நிஜ உலகில் மனிதர்களைப் போலப் பொருட்களுடன் எவ்வாறு தொடர்புகொள்ள வேண்டும் என்பதைப் பழக்குவதே இதன் நோக்கமாகும். பயிற்சி மையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது கைகளிலும் உடலிலும் அசைவுகளைக் கண்காணிக்கும் மோஷன்-கேப்சர் (Motion-capture) சென்சார்கள் மற்றும் விரல்களில் சிப்புகளை மாட்டிக்கொள்கின்றனர்.
கணினித் திரை காட்டும் வழிகாட்டுதலின்படி, கப்பில் தண்ணீர் எடுப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, தரையைக் கூட்டுவது, மேஜைகளைத் துடைப்பது மற்றும் துணி மடிப்பது போன்ற வேலைகளைச் செய்து காட்டுகின்றனர். தொழிலாளர்களின் இந்த நுட்பமான உடல் அசைவுகள் சென்சார்கள் மூலம் டிஜிட்டல் தரவுகளாகப் பதிவு செய்யப்பட்டு, ரோபோ தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பயிற்சித் தகவல்களாக வழங்கப்படுகின்றன.
வருமானமும் கடுமையான பணிச்சூழலும்
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ரோபோ பயிற்சியாளர்களுக்கு மாதம் 4,000 முதல் 6,000 யுவான் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,000 முதல் ரூ.85,000 வரை) சம்பளம் வழங்கப்படுகிறது. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், ஒரே வேலையை நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் செய்வது கடுமையான சோர்வைத் தருவதாகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் ஆட்டோமொபைல் துறையில் வேலையை இழந்து, வயது வரம்பால் புதிய வேலை கிடைக்காமல் தவித்த 40 வயதான லியு யுன் பெய்ஜிங்கில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இணைந்தார். "ரோபோக்களுக்குப் பயிற்சி அளிப்பது 2 வயதுக் குழந்தைக்கு வேலை கற்றுக்கொடுப்பது போன்றது" எனக் கூறும் அவர், தினமும் 160 முதல் 260 முறை வரை ஒரே வேலையைச் செய்துள்ளார். ஒரு நாளைக்கு 200 முறை பாத்திரம் கழுவுவது, மேஜை துடைப்பது போன்ற அசைவுகளே தனது உடல் தாங்கும் உச்சபட்ச எல்லை எனக் கூறி பெரும் களைப்படைந்தார்.
விடுமுறை நாட்களில் பகுதிநேரமாகப் பணம் ஈட்ட விரும்பும் கல்லூரி மாணவர்களையும் இது ஈர்த்துள்ளது. வட சீனாவைச் சேர்ந்த 22 வயது மாணவர் சன், பகல் ஷிப்ட்டுக்கு சுமார் ரூ.1,700-ம், இரவு ஷிப்ட்டுக்கு சுமார் ரூ.1,900-ம் சம்பளமாகப் பெற்றாலும், உடல் மற்றும் மன உளைச்சலுக்கு இந்த வருமானம் ஈடாகாது எனக் கூறி சில வாரங்களிலேயே பல இளைஞர்கள் விலகிவிடுவதாகக் குறிப்பிடுகிறார்.
வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு
அனைவரும் பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்ல. கிழக்கு சீனாவைச் சேர்ந்த குவோ ஹாங்ஜுவான் போன்ற சிலர், வீட்டிலிருந்தபடியே தினமும் சுமார் 6 மணி நேரம் புத்தகங்களை அடுக்கி வைப்பது, மேஜை துடைப்பது போன்ற வீட்டு வேலைகளைப் பதிவு செய்து மாதம் சுமார் ரூ.57,000 வருமானம் ஈட்டுகின்றனர். குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டே பணிபுரிய இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

