புதிய வருமான வரி மசோதா வாபஸ்! திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் புதிய மசோதா ஆகஸ்ட் 11-ல் தாக்கல் செய்யப்படும். தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த மசோதா வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும்.

புதிய வருமான வரி மசோதா
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவிற்குப் பதிலாக, திருத்தப்பட்ட புதிய மசோதா வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுக்குழுவின் பரிசீலனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா, தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பைஜெயந்த் பாண்டா தலைமையிலான இந்தக் குழு பல்வேறு திருத்தங்களைப் பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தற்போது தயாரித்துள்ளது.
வரி செலுத்தும் முறை
இந்த புதிய மசோதா, 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.