சிறுதொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்! அரசின் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குச் சிறு தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் இதற்கான நிதியுதவியை வழங்குகிறது, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சிறு தொழில் தொடங்க கடன்
பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் சிறு தொழில் தொடங்க குறைந்த விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் இதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது.
கடன் பங்கு தொகை :
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு 85%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் பங்கு – 10%
பயனாளியின் பங்கு – 05%
சிறுதொழில் கடன்
ரூ.1.25 லட்சம் வரை – 7%
ரூ.1.25 லட்சம் மேல் ரூ.5 லட்சம் வரை – 8%
ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை – 8%
திரும்ப செலுத்தும் காலம் : 3 முதல் 5 ஆண்டுகள்
தகுதி:
இந்த கடன் பெற விரும்பும் பயனாளி மாநில அல்லது மத்திய பட்டியலில் உள்ளபடி மிக பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும்
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்
எப்படி விண்ணப்பிப்பது?
சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைமை அலுவலகம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவம் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
சாதி வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ்
முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி
திட்ட அறிக்கை
ரேஷன் கார்டு
ஓட்டுநர் உரிமம்
நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள்
ஆதார் அட்டை
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அல்லது கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும்.