- Home
- Business
- மத்திய அரசின் வரி உயர்வுக்கு பிறகு.. தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு - எவ்வளவு?
மத்திய அரசின் வரி உயர்வுக்கு பிறகு.. தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு - எவ்வளவு?
அமெரிக்க-ஈரான் பதற்றம் மற்றும் மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக சந்தைகளையே அதிரவைத்துள்ள நிலையில், அதன் தாக்கம் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் கடுமையாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் அதிரடி விலையேற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த குடும்பங்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இறக்குமதி வரி உயர்வு
இதற்கிடையில், அடுத்த ஒரு வருடத்திற்கு இந்தியர்கள் யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த கட்டமாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்க இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் தங்க விலை
சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி, உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்வது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தங்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்க விலை இன்று
இந்நிலையில், இன்று சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200 ஆக விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 அதிகரித்து ரூ.15,400-ஐ எட்டியுள்ளது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது, ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வு
தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை காரணமாக, சாதாரண மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் மறுபக்கம், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த விலையேற்றம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. வரி உயர்வு, உலக சந்தை பதற்றம் மற்றும் டாலர் சரிவு போன்ற காரணங்களால் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

