தங்கம் விலை ஏறிக்கிட்டே போகுதே... இப்ப நகை வாங்கலாமா, கூடாதா? ஆனந்த் சீனிவாசன் பதில்
விலை உயர்ந்துகொண்டே செல்லும்போது தங்கம் வாங்கலாமா? அல்லது மீண்டும் விலை குறைவதற்காகக் காத்திருக்கலாமா? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்.
சமீப நாட்களாக தங்கம் விலை தொர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது இதற்கு முக்கியக் காரணம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். விலை இப்படி உயர்ந்துகொண்டே செல்லும்போது தங்கம் வாங்கலாமா? அல்லது மீண்டும் விலை குறைவதற்காகக் காத்திருக்கலாமா? இந்தக் கேள்விக்கு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தது. அமெரிக்காவின் இந்த முடிவு உலக நாடுகள் பலவற்றிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக உலகம் முழுவதும் தங்கத்தின் விலையும் ஏறுமுகமாக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு பல நாடுகளின் பங்கு வர்த்தகத்திலும் தாக்கல் செலுத்தியது.
இந்தியாவிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,885க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பை நகரில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 6,975க்கு விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை உயர்வு குறித்த விளக்கம் அளித்துள்ளார். "நம் நாட்டில் தங்கத்தின் விலை இடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொரு நகரத்திலும் விலையில் வித்தியாசம் இருக்கும். மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் தங்கம் விலை சற்று குறைவாக உள்ளது. இதனால், மும்பையைக் காட்டிலும் அதிகமாகவே விற்பனையாகி வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2564 டாலராக உள்ளது. இதன்படி, நம் நாட்டில் தங்கம் விலை ரூ.6900ஐ தொட்டிருக்க வேண்டும். ஆனால், அதைவிட சற்று குறைவாகத்தான் உள்ளது. முதலில் பங்குச்சந்தையில் கிடைக்கும் கோல்ட் பீஸ்ஸை வைத்துக் தங்கத்தின் விலையைக் கணக்கிடக் கூடாது.
குறிப்பிட்ட அளவுக்குத் தங்கம் முறைகேடாகவும் நாட்டிற்குள் வரும். தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிப்பதால், அதைத் தவிர்க்க தங்கக் கடத்தல் தொழில் நடக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் இந்த வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கக் கடத்தல் குறைந்துள்ளது. அதிகாரபூர்வமாக தங்கத்தை இறக்குமதி செய்வதும் கூடியிருக்கிறது.
இதனால் இப்போது தங்கத்தின் விலை என்ன என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இப்போதைய டிரெண்ட் என்ன என்று தெரிகிறது. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வட்டி விகிதத்தை 3% ஆக வைத்திருப்போம் என அமெரிக்கா சொல்கிறது. அப்படி நடந்தால் தங்கத்தின் விலை இன்னும் கூடவே செய்யும். எனவே, இப்போதே தங்கத்தை வாங்கிவிடலாம். இல்லாவிட்டால், முன்கூட்டியே வாங்காமால் மிஸ் பண்ணிவிட்டோமே என்று வருதப்படுவீர்கள்" என்று ஆனந்த் சீனிவாசன் சொல்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதற்கு முன்பு இருந்த அளவுக்குத்தான் தங்கத்தின் விலை உள்ளது. ஆனால், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.