தங்கம் விலை தொடர்ந்து குறையுது! தங்கத்தில் முதலீடு என்ன வழிகள் இருக்குன்னு தெரியுமா?
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன் என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Gold investment
பெரும்பாலான இந்திய குடும்பங்கள், ஏதோ ஒரு வகையில் தங்கத்தை வைத்திருக்கிறார்கள். பாரம்பரியமாக, இந்தியர்கள் தங்கத்தை சேமிப்பதற்கான ஒரு வழியாகவும் வாங்கி வருகிறார்கள். இப்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன் என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Gold Coins
தங்க நாணயங்களை நகைக்கடைகள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் இப்போது இ-காமர்ஸ் இணையதளங்களில் கூட வாங்கலாம். 24 காரட் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் 999 நேர்த்தியுடன் கிடைக்கின்றன. தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அனைத்தும் BIS தரநிலைகளின்படி ஹால்மார்க் செய்யப்படும். இவற்றை வாங்கும்போது, சேதம் அடையாத வகையில் பேக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வது நல்லது. 0.5 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுள்ள தங்க நாணயங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், நகைக்கடைக்காரரிடம் வாங்கும் தங்கத்தின் எடையை சரிபார்க்க வேண்டும்.
Gold Savings Schemes
பல நகைக்கடைக்காரர்கள் தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். தங்கம் அல்லது நகைச் சேமிப்புத் திட்டங்களில், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகையை மாதம்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும். காலக்கெடு முடிந்ததும், போனஸ் தொகை உட்பட டெபாசிட் செய்யப்பட்ட மொத்தப் பணத்துக்குச் சமமான மதிப்பில் தங்கத்தை (அதே நகைக்கடைக்காரரிடம்) வாங்கலாம். கூடவே பரிசுப் பொருளைக் கூட சில கடைகளில் வழங்குகிறார்கள்.
Gold ETF
மிகவும் செலவு குறைந்த முறையில் காகிதத் தங்கத்தை வாங்குவதற்குரிய மாற்று வழி தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் எனப்படும் தங்க ஈடிஎஃப் (ETF). இத்தகைய முதலீடுகள் (வாங்குதல் மற்றும் விற்பனை) பங்குச்சந்தையில் (NSE அல்லது BSE) தங்கத்தை அடிப்படைச் சொத்தாகக் கொண்டு நடக்கும். இதன் விலையில் காணப்படும் வெளிப்படைத்தன்மை இதில் உள்ள மற்றொரு நல்ல அம்சம். இதன் விலை தங்கத்தின் உண்மையான விலைக்கு மிக நெருக்கமானதாக இருக்கும்.
தங்க ஈடிஎஃப்பில் முதலீடு செய்ய, பங்குத் தரகருடன் வர்த்தகக் கணக்கும் டிமேட் கணக்கும் வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) மூலம் ஒருவர் மொத்தமாகவோ அல்லது சீரான இடைவெளியிலோ வாங்கலாம்
Sovereign Gold Bonds
தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds) அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன. ஆனால் அரசாங்கம் இதனை எப்போதாதவது தான் விற்பனை செய்யும். ஒரு வருடத்தில் இரண்டு முறை ஒரு வார காலம் தங்கப் பத்திர விற்பனை நடக்கும். எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, வேறு வழிகளில் தங்கத்தை வாங்குவதே சிறந்த வழி.
Digital Gold
Paytm, PhonePe, Google Pay போன்ற பேமெண்ட் அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இந்த டிஜிட்டல் தங்கம் ஒரு ரூபாய் முதல் கிடைக்கிறது! பெரும்பாலான பேமெண்ட் ஆப் நிறுவனங்கள் SafeGold உடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.