- Home
- Business
- டிக்டாக் ரீல்ஸ் டூ ரூ.81 கோடி: ஊறுகாய் விற்று சாதித்த 2 பெண்களின் இன்ஸ்பயரிங் சக்சஸ் ஸ்டோரி!
டிக்டாக் ரீல்ஸ் டூ ரூ.81 கோடி: ஊறுகாய் விற்று சாதித்த 2 பெண்களின் இன்ஸ்பயரிங் சக்சஸ் ஸ்டோரி!
டிக்டாக்கில் ஊறுகாய் ரீல்ஸ்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய லியா மார்கஸ், யாசமன் பக்தியார் என்ற 2 இளம் தோழிகள், முழு நேரமாக 'குட் கேர்ள் ஸ்நாக்ஸ்' என்ற உணவு பிராண்டைத் தொடங்கி அசத்தியுள்ளனர்.

டிக்டாக் ரீல்ஸில் தொடங்கிய பயணம்
டிக்டாக்கில் சும்மா ஊறுகாய் ரீல்ஸ்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய 2 இளம் தோழிகள், இன்று லாஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்ட ஒரு முன்னணி உணவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.81 கோடியைத் தொட்டுள்ளது.
26 வயதான லியா மார்கஸ் (Leah Marcus), 27 வயதான யாசமன் பக்தியார் (Yasaman Bakhtiar) ஆகிய இருவரும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது தோழிகளானார்கள். 2022-ல் படிப்பை முடித்த இவர்கள், 2023 வாக்கில் ஊறுகாய், சிற்றுண்டி தொடர்பான டிக்டாக் வீடியோக்களை தினமும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அப்போது இணையத்தில் ஊறுகாய் தொடர்பான கன்டென்ட்கள் பெரிய அளவில் ட்ரெண்டாகி வந்தன.
அந்தப் பழக்கமே ஒரு கட்டத்தில் தொழிலாக உருவெடுத்தது. விளைவு, 2023 கோடைக்காலத்தில் இருவருமே தங்களது வழக்கமான வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமாக உணவு பிராண்டை உருவாக்கும் களத்தில் இறங்கினர்.
ஹாட் கேர்ள் ஊறுகாய் அறிமுகம்
இவர்கள் இருவரும் இணைந்து குட் கேர்ள் ஸ்நாக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பிப்ரவரி 2024-ல் தங்களின் முதல் தயாரிப்பான ஹாட் கேர்ள் ஊறுகாயயை சந்தையில் அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் தங்களது சொந்த இணையதளம் வழியே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து, சுவை, பேக்கேஜிங் குறித்த கருத்துக்களைப் பெற்று மேம்படுத்தினர். CNBC Make It தகவலின்படி, பெரிய முதலீட்டாளர்களை அணுகும் முன், தங்களது நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்தே ஆரம்பக்கட்ட முதலீட்டைத் திரட்டியுள்ளனர்.
மளிகைக் கடைகளில் நுழைவு & நிதி திரட்டல்
அதன்பின் ஆன்லைனைத் தாண்டி, அமெரிக்காவின் பிரபல சூப்பர் மார்க்கெட்களில் தங்கள் தயாரிப்பைக் கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதன் பலனாக, 2025-ல் பிரபல ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட், பிரீமியம் மளிகைக் கடையான எரேவோன் (Erewhon) ஆகியவற்றில் தங்கள் ஊறுகாய்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலைப் பெற்றனர். இது ஆன்லைன் வர்த்தகத்தைத் தாண்டி ஆஃப்லைனிலும் பிராண்டின் வர்த்தகத்தை வேற லெவலுக்கு உயர்த்தியது.
இதை தொடர்ந்து, தங்களது சீட் ஃபண்டிங் (Seed Funding) சுற்றில் இந்நிறுவனம் 3 மில்லியன் டாலர்களை முதலீடாகத் திரட்டியது. இதன் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 8.5 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.81.4 முதல் ரூ.81.6 கோடி) உயர்ந்தது.
அடுத்தகட்ட இலக்கு
ஊறுகாயுடன் மட்டும் நின்றுவிடாமல், மற்ற சிற்றுண்டி வகைகளிலும் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக லியா, யாசமன் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள், வாடிக்கையாளர் தொடர்பை மையமாக வைத்தே இந்த பிராண்டை அவர்கள் தொடர்ந்து வளர்த்து வருகின்றனர். தற்போது இந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1,80,000 பேர் பின்தொடர்கின்றனர். நிறுவனத்தின் முதலீடு, சந்தை மதிப்பு விவரங்கள் வெளிவந்துள்ள போதிலும், தங்களது லாபம், வருவாய் குறித்த துல்லியமான எண்களை இந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

