- Home
- Business
- Flight Ticket: விமான பயணிகளுக்கு பேரதிர்ச்சி.. 20% வரை உயரப் போகும் டிக்கெட் கட்டணம்? முழு விவரம்!
Flight Ticket: விமான பயணிகளுக்கு பேரதிர்ச்சி.. 20% வரை உயரப் போகும் டிக்கெட் கட்டணம்? முழு விவரம்!
Flight Ticket: சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் 5 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம்? என இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

விமான கட்டணம் உயருகிறது?
ஊருக்கு வர நினைக்கும் வெளிநாடு வாழ் மக்களுக்கும், வெளிநாட்டுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியான செய்தி. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கு மேல் தொடர்ந்து நீடித்தால், சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் 5 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விலை உயர்வு நீண்ட தூரம் பயணம் செய்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். அதேசமயம், விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் வழித்தடங்களில் கட்டண உயர்வு சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் எவ்வளவு உயரும்?
பிரபல குளோபல் ஆடிட்டிங் நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) வெளியிட்ட தரவுகளின்படி, கச்சா எண்ணெய் விலை 100-110 டாலருக்கு இடையில் இருந்தால் சர்வதேச விமான கட்டணம் 8 முதல் 15 சதவீதம் வரை உயரும். ஒருவேளை விலை 110-120 டாலராக அதிகரித்தால், டிக்கெட் கட்டணம் 12 முதல் 20 சதவீதம் வரை எகிறும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், இந்த கூடுதல் செலவு பயணிகளுக்கு பெரும் சுமையாக மாறும்.
கிராண்ட் தோர்ன்டன் பாரத் (Grant Thornton Bharat) நிறுவனத்தின் கணிப்புப்படி, வெவ்வேறு வழித்தடங்களில் கட்டண உயர்வு மாறுபடும். கடும் போட்டி உள்ள ரூட்களில் 5-10 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கலாம். ஆனால், அமெரிக்கா போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு இது 10 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
வளைகுடா, ஐரோப்பா பயணிகளுக்கு பாதிப்பு
இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும் செல்லும் விமானங்களை இந்த கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வட அமெரிக்காவுக்கான நீண்ட தூர சேவைகளிலும் பெரிய அளவில் கட்டணம் உயரும். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் நீடித்தால், விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எரிபொருள் விலை உயர்வை நிறுவனங்கள் பயணிகள் தலையில்தான் கட்டும்.
என்ன காரணம்?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமும், மோதல்களும்தான் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் நீடிக்க முக்கிய காரணம். வெள்ளிக்கிழமை நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 104 டாலருக்கு கீழ் வந்தது. கடந்த இரண்டு செஷன்களில் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு ஏற்பட்டாலும், விலை இன்னும் உச்சத்தில்தான் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு அப்பால், கச்சா எண்ணெயை விமான எரிபொருளாக மாற்றும் சுத்திகரிப்பு கட்டணங்களும் இந்த காலகட்டத்தில் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு இன்னும் தீவிரமான சுமையாக மாறும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

