- Home
- Business
- RBI Rules: 2 வருஷம் பயன்படுத்தாமல் முடங்கிய பேங்க் அக்கவுண்ட்; மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?
RBI Rules: 2 வருஷம் பயன்படுத்தாமல் முடங்கிய பேங்க் அக்கவுண்ட்; மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?
தொடர்ந்து 2 ஆண்டுகள் வாடிக்கையாளர் தரப்பில் பணப் பரிவர்த்தனை இல்லாத சேமிப்புக் கணக்குகள் 'செயலிழந்த கணக்கு' (Inoperative Account) என வகைப்படுத்தப்பட்டாலும், அதில் உள்ள பணம் எங்கும் போகாது; வட்டியும் தொடர்ந்து வரவு வைக்கப்படும்.

பழைய பேங்க் அக்கவுண்ட்டை மறந்துட்டீங்களா?
வேலை மாறியிருப்போம், சொந்த ஊரை விட்டு வேறு நகரத்திற்கு இடம் பெயர்ந்திருப்போம், அல்லது புதிய வங்கியின் ஆஃபர்களைப் பார்த்து அங்கு கணக்கு தொடங்கியிருப்போம். இந்த ஓட்டத்தில் நாம் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? பழைய சேமிப்புக் கணக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வந்ததுதான்.
தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக நீங்களாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால், அந்த வங்கிக் கணக்கு தானாகவே ‘செயலிழந்த கணக்கு’ (Inoperative Account) என்ற பட்டியலுக்கு சென்றுவிடும். அப்போ உள்ளே இருந்த பணம் காலியா? அக்கவுண்ட் அவ்வளவு தானா? என்று பதற வேண்டாம். உண்மை என்னவென்றால், உங்கள் பணம் 1 ரூபாய் கூட எங்கும் போகாது; அதன் மீதான முழு உரிமையும் உங்களுக்கே உண்டு.
கணக்கு 'இன்-ஆபரேட்டிவ்' ஆனால் என்ன நடக்கும்?
முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: ஒரு கணக்கு செயலிழந்துவிட்டது என வங்கி வகைப்படுத்துவதே உங்கள் பணத்தைப் பாதுகாக்கத்தான். மோசடி நபர்கள் அத்தகைய தூங்கும் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது.
உங்க அனுமதியின்றி உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை வங்கியால் எடுக்க முடியாது. மேலும், "கணக்கு செயலிழந்துவிட்டது என்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படுத்தக்கூடாது" என்று ரிசர்வ் வங்கி (RBI) மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
(குறிப்பு: வங்கி உங்களுக்கு வழங்கும் 3 மாத வட்டி கணக்கில் வரவு வைக்கப்பட்டால், அது பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், உங்க உத்தரவின் பேரில் டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம்.)
பழைய ஊருக்கே போகணுமா? 'நோ' சொன்ன ஆர்.பி.ஐ
பலருக்கும் இருக்கும் பெரிய தயக்கம், நான் காலேஜ் படிக்கும்போது கோயம்புத்தூர்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணேன், இப்போ சென்னையில இருக்கேன்... திரும்ப அங்க போகணுமா? என்பதுதான்.
தேவையில்லை. நீங்க கணக்கு தொடங்கிய அதே 'ஹோம் பிராஞ்ச்' (Home Branch)-க்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீங்க இப்போது வசிக்கும் பகுதியிலுள்ள அதே வங்கியின் எந்தவொரு கிளைக்கு சென்றும் உங்கள் KYC ஆவணங்களைக் கொடுத்து கணக்கை மீட்டெடுக்கலாம். இன்னும் ஒருபடி மேலே போய், உங்க வங்கி வீடியோ சரிபார்ப்பு (V-CIP - Video KYC) வசதியைக் கொண்டிருந்தால், நீங்க வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் முகம் காட்டி கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்குத் திறந்துவிடலாம்.
ஆவணங்களைக் கொடுங்க... 3 நாளில் வேலை முடியும்!
உங்களுடைய ஆதார், பான் கார்டு, புதிய முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற கேஒய்சி (KYC) ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பியுங்கள். நீங்கள் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொடுத்த 3 வேலை நாட்களுக்குள் அந்தக் கணக்கை வங்கி மீண்டும் செயல்படுத்தியே ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்காக வங்கி உங்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் (Activation Charge) வசூலிக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் கண்டிப்பான உத்தரவு.
சர்ப்ரைஸ்: தூங்கும் கணக்கிலும் வட்டி ஏறும்!
கணக்கு முடங்கிக் கிடந்தாலும், உங்கள் பணத்திற்கான சேமிப்புக் கணக்கு வட்டி (Savings Interest) ஒருபோதும் நிற்பதில்லை! கணக்கு ஆக்டிவாக இருந்தாலும் சரி, தூங்கிக் கொண்டிருந்தாலும் சரி, அதற்குரிய வட்டி தொடர்ந்து கணக்கில் வரவு வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஒருவேளை தொடர்ந்து 10 ஆண்டுகளாக அந்தக் கணக்கை நீங்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றால், அது ‘கோரப்படாத வைப்புத்தொகை’ (Unclaimed Deposit) என வகைப்படுத்தப்பட்டு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்பட்டுவிடும். அப்போதும் பணம் உங்களுடையதுதான்; ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ ‘உத்கம்’ (UDGAM) போர்ட்டல் மூலம் உங்கள் பணம் எந்த வங்கியில் இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விண்ணப்பித்து மீட்டுவிடலாம்.
வங்கி இழுத்தடித்தால் என்ன செய்வது?
எல்லா ஆவணங்களையும் கொடுத்தும் வங்கி அதிகாரிகள் கணக்கைச் செயல்படுத்தாமல் அலைய விடுகிறார்களா? முதலில் அந்த வங்கிக் கிளையிலேயே எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து ஒப்புகைச் சீட்டு (Acknowledgement) வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் தீர்வு காணாவிட்டால், ஒரு பைசா செலவின்றி ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளரிடம் (RBI Ombudsman) நேரடியாக ஆன்லைனில் புகார் தட்டிவிடலாம்.
பழைய பாஸ்புக்கை பரணில் இருந்து எடுங்கள்; கணக்கில் எவ்வளவு பணம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். இன்றே உங்கள் KYC கொடுத்து பணத்தை உங்கள் கைக்குக் கொண்டுவாருங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

