- Home
- Business
- DMart vs Blinkit: 24 ஆண்டு டிமார்ட் சாம்ராஜ்யத்தை நொறுக்கிய பிளிங்கிட்; ஒரு கடை கூட இல்லாமல் சாதித்தது எப்படி?
DMart vs Blinkit: 24 ஆண்டு டிமார்ட் சாம்ராஜ்யத்தை நொறுக்கிய பிளிங்கிட்; ஒரு கடை கூட இல்லாமல் சாதித்தது எப்படி?
குவிக் காமர்ஸ் துறையின் அசுர வளர்ச்சியால், 24 ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்த டிமார்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை ஒரு கடை கூட இல்லாமல் பிளிங்கிட் (Blinkit) நிறுவனம் மிக நெருக்கமாக எட்டியுள்ளது. வருவாய் இடைவெளி வெறும் ரூ.54 கோடி மட்டுமே.

டிமார்ட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த பிளிங்கிட்!
இந்திய ரீடைல் வர்த்தகச் சந்தையில் குவிக் காமர்ஸ் (Quick Commerce) தளங்கள் அசுர வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிறு நகரங்களில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும், பெருநகரங்களில் உள்ள பாரம்பரிய மளிகைக் கடைகளை காணாமல் போகச் செய்யும் புதிய சக்தியாக இத்துறை உருவெடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 ஆண்டுகளாகப் போராடி படிப்படியாக இந்திய நுகர்வோர் மத்தியில் தனி இடம்பிடித்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (டிமார்ட்) நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியை, ஒரேயொரு நேரடி ரீடைல் கடையைக் கூடத் திறக்காமல் வெறும் டார்க் ஸ்டோர்கள் (Dark Stores) மூலமாகவே பிளிங்கிட் (Blinkit) நிறுவனம் மிக நெருக்கமாக எட்டிப் பிடித்துள்ளது.
வருவாய் & வளர்ச்சி ஒப்பீடு
டிமார்ட் நிறுவனம் தனது 24 ஆண்டு காலப் பயணத்தில் நாடு முழுவதும் 518 கடைகளைத் திறந்து, ஜூலை - செப்டம்பர் 2026 காலாண்டில் ரூ.19,206 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், ஒரு ரீடைல் ஷோரூம் கூட இல்லாத பிளிங்கிட் நிறுவனம் இதே காலகட்டத்தில் ரூ.19,152 கோடி வருவாயை எட்டியுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையிலான வருவாய் வித்தியாசம் வெறும் ரூ.54 கோடி மட்டுமே. வளர்ச்சி விகிதத்தில் இரு நிறுவனங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. கடந்த ஓராண்டில் டிமார்ட்டின் வளர்ச்சி 18% மட்டுமே. அதே காலகட்டத்தில் பிளிங்கிட்டின் வளர்ச்சி விகிதம் 94% ஆக உயர்ந்துள்ளது.
கடை அளவிலான வர்த்தகம் & வாடிக்கையாளர் எண்ணிக்கை
செப்டம்பர் காலாண்டில் புதிதாக இணைக்கப்பட்ட 15 கடைகள் உட்பட, டிமார்ட் நிறுவனம் தனது 518 கடைகள் வாயிலாகச் செயல்படுகிறது. ஒரு கடையில் ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.40 லட்சம் வரையிலான வர்த்தகம் நடைபெறுகிறது. இக்காலாண்டின் 3 மாதங்களில் 11.1 கோடி பில்கள் (பரிவர்த்தனை) பதிவாகியுள்ளன. மறுபுறம், பிளிங்கிட் நிறுவனம் நாடு முழுவதும் 2,751 டார்க் ஸ்டோர்களை கொண்டு இயங்குகிறது. இதில் ஒரு ஸ்டோருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக ரூ.9 லட்சம் அளவிலான வர்த்தகம் நடக்கிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் சுமார் 3.7 கோடி வாடிக்கையாளர்கள் பிளிங்கிட் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.
லாப வரம்பு: நிதியியல் ரீதியாக முன்னிலையில் யார்?
2 நிறுவனங்களும் மாறுபட்ட வர்த்தகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அவை குறிவைக்கும் சந்தை, நுகர்வோர் மற்றும் விற்பனை செய்யும் பொருட்கள் பெரும்பாலும் ஒன்றே. எனினும், நிதியியல் ரீதியான லாபத்தில் டிமார்ட் இன்னும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து உள்ளது. டிமார்ட்டின் EBITDA ரூ.1,403 கோடியாக உள்ளது. அதாவது, விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் நிறுவனம் ரூ.7.30 சம்பாதிக்கிறது. பிளிங்கிட்டின் EBITDA ரூ.184 கோடியாக மட்டுமே உள்ளது. அதாவது, ரூ.100-க்கு விற்பனை செய்தால் நிறுவனம் ரூ.1 மட்டுமே வருவாயாகப் பெறுகிறது. நிகர லாப அடிப்படையில் பிளிங்கிட்டை விட டிமார்ட் சுமார் 7 மடங்கு அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.
எதிர்காலப் போக்கு: மார்ஜின் எகிறும் பிளிங்கிட்!
லாபத்தில் டிமார்ட் முன்னிலையில் இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிப் போக்கு பிளிங்கிட்டுக்கு சாதகமாக மாறி வருகிறது. பெருநகரங்களில் பிளிங்கிட் ஏற்கனவே 5% மார்ஜின் அளவைத் தொட்டுள்ளது. மேலும், தொடர்ந்து கடந்த 6 காலாண்டுகளாக அதன் மார்ஜின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில், டிமார்ட்டின் மார்ஜின் 7.6%-ல் இருந்து 7.3% ஆக சரிந்துள்ளது. பட்ஜெட் & நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெருமளவில் சேமிப்பைத் தருவதில் டிமார்ட் முதன்மையாக விளங்குகிறது; பிளிங்கிட் நிறுவனம் அதிவேக டெலிவரி & வாடிக்கையாளர் சௌகரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மொத்த வருவாய் மற்றும் லாப வரம்பில் டிமார்ட் இன்னும் முதலிடத்தில் தொடர்ந்தாலும், அசுர வளர்ச்சி வேகம் மற்றும் மார்ஜின் உயர்வில் பிளிங்கிட் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. அதேசமயம், டிமார்ட் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் இருப்பது அதற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. வர்த்தகத்தில் உள்ள கால அவகாசத்தையும், பிளிங்கிட் காட்டியுள்ள வேகமான வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால், பிளிங்கிட்டின் இந்த சாதனை ரீடைல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.





