- Home
- Business
- சென்னை - பெங்களூரு வெறும் 90 நிமிடம்? ஆந்திரா வழியாக உருவாகும் புதிய எக்ஸ்பிரஸ்வே வேகம்!
சென்னை - பெங்களூரு வெறும் 90 நிமிடம்? ஆந்திரா வழியாக உருவாகும் புதிய எக்ஸ்பிரஸ்வே வேகம்!
சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.17,930 கோடி செலவில் உருவாகும் இந்த அதிவேக சாலை திறக்கப்பட்டால், சென்னை- பெங்களூரு இடையிலான பயண நேரம் வெறும் 90 நிமிடமாக குறையும் என கூறப்படுகிறது.

சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே
சென்னை முதல் பெங்களூரு வரை செல்லும் பயணம்... இதுவரை சாலை நெரிசல், டோல் காத்திருப்பு, நீண்ட நேர டிரைவ் என்று பலருக்கும் சோர்வை கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் சில மாதங்களில் இந்த காட்சி முழுவதும் மாறக்கூடும். காரணம், ஆந்திரப் பிரதேசம் வழியாக வேகமாக உருவாகி வரும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டம்.

ஆந்திரா அதிவேக சாலை
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வரும் இந்த பிரம்மாண்ட திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மொகிலி காட் பகுதியில் இன்னும் 7 கிலோமீட்டர், பலமனேர் அருகே 3 கிலோமீட்டர் பணிகளும் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பெங்களூரு பயணம்
மொத்தம் 258 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகும் இந்த எக்ஸ்பிரஸ்வேக்கு ரூ.17,930 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா பகுதியில் மட்டும் சுமார் 65 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னை முதல் பெங்களூரு வரை பயணிக்க சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த புதிய அதிவேக சாலை திறக்கப்பட்டால், பயண நேரம் வெறும் 90 நிமிடத்தில் குறையலாம் என்ற தகவல் வாகன ஓட்டிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை அண்டர்பாஸ் திட்டம்
இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. சித்தூர் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகள் இருப்பதால், இயல்பு பாதிக்கப்படாத வகையில் 12 அண்டர்பாஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இயங்க முடியும். இந்த பணிகளால் தான் சிறிய தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய எக்ஸ்பிரஸ்வே தென்னிந்தியா நெடுஞ்சாலை
இது சாதாரண சாலை திட்டம் மட்டுமல்ல. தென்னிந்தியாவின் பொருளாதார வரைபடத்தையே மாற்றக்கூடிய இணைப்பு பாதையாக இது பார்க்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்து வேகமாக, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து அதிகரித்தால் இந்த நான்கு வழிச்சாலை எட்டு வழிச்சாலையாகவும் விரிவாக்கப்படலாம் என கூறப்படுவது இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

