நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை: அச்சத்தில் நகை பிரியர்கள் - தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ள நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Gold Rate
நாட்டில் கடந்த ஜூலை மாதம் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இதனை கவனித்த மத்திய அரசு, அதே மாதம் 22ம் தேதி நகை மீதான இறக்குமதி வரியை கணிசமாகக் குறைத்தது. வரி குறைப்பின் காரணமாக அன்றைய தினமே தங்கம் சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது. இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்து சவரன் ரூ.51 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. இதனால் நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
Gold Biscuit
என்னதான் வரியை குறைத்தாலும் நகையின் விலை கட்டுப்படுவதாக இல்லை. ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. தொடர் விலை ஏற்றத்தின் காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்தைத் தொட்டது.
Gold
விலை ஏற்றத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.56 ஆயிரத்து 800க்கும், கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நகை மீதான வரியை குறைத்தாலும் அதன் பலன் சில காலத்திற்கு தான் மக்களுக்கு கிடைக்கும். மாறாக விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Gold Rate
தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சப்பட தேவை இல்லை. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் ஓடுகின்ற குதிரையின் மீது பந்தயம் கட்டுவது போன்றது. உங்களது முதலீட்டின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் நீங்கள் அச்சப்பட தேவை இல்லை. உங்களால் மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களால் முடிந்த தொகையை தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது.
Investment on Gold
நேற்று இருந்ததை விட இன்று தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டதாக நினைத்து தங்கத்தில் முதலீடு செய்யாமல் இருந்துவிடாதீர்கள். அந்த தங்கம் நாளையும் விலை ஏறும். இதனால் உங்கள் முதலீடு நட்டமாகாது. நீங்கள் அந்த தங்கத்தை விற்பதற்கு சில, பல வருடங்கள் ஆகலாம். அன்று நீங்கள் முதலீடு செய்த தங்கத்தின் மதிப்பு உங்களால் கணிக்க முடியாத உச்சத்தை அடைந்திருக்கலாம். எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு அச்சப்பட வேண்டாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.