- Home
- Business
- ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% கட்டணம்?.. வெளியாகிறதா அறிவிப்பு? முழு விவரம்!
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% கட்டணம்?.. வெளியாகிறதா அறிவிப்பு? முழு விவரம்!
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% கட்டணம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியன் ரயில்வே
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி வருகிறது.
மேலும் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வருவதற்கு முன்பு ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது.
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகை
அதாவது ரயில்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2020ம் ஆண்டு கொரொனா பேரலை இந்தியாவை தாக்கியபோது நிதி நெருக்கடி காரணமாக மார்ச் 2020ல் மூத்த குடிமக்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டது. கொரோனா முடிந்து இந்தியாவின் நிதி நிலைமை சீரானபோதும் மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை.
மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை
இந்த நிலையில், ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50% கட்டணம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிதி அமைச்சகத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்தச் சலுகை அங்கீகரிக்கப்பட்டால், கடந்த ஆறு ஆண்டுகளாக முழு கட்டணம் செலுத்தி வரும் முதியவர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும்.
லோயர் பெர்த் சலுகை
ரயிலில் கட்டண சலுகை வழங்கப்படாவிட்டாலும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ரயிலில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த்கள் வழங்கப்படுகின்றன.
டிக்கெட் புக் செய்யும்போதே அவர்களுக்கு லோயர் பெர்த் வழங்கப்பட்டு விடும். ஒரு வேளை ரயில் புறப்பட்ட பிறகும் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகை
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கியமான ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வசதி உள்ளது. ரயில் நிலைய நுழைவு வாயில் இருந்து நடைமேடைக்கு நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். மேலும் மூத்த குடிமக்களின் பேக்குகளை எடுத்து செல்ல போர்ட்டர்களும் உள்ளனர்.
இந்தியாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்க அவசியமின்றி விரைவாக டிக்கெட்டுகளை பெற முடியும். மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் மூத்த குடிமக்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

