வாடகை உயர்வில் ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடம்.. சென்னை எந்த இடம்? முழு விவரம் உள்ளே!
மும்பை சாதனை அளவாக 56 லட்சம் சதுர அடி வாடகைக்கு விடப்பட்டு, 7.5% வாடகை வளர்ச்சியைக் கண்டுள்ளது. 16.2% இடங்கள் காலியாக இருப்பதால், ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ. 4,025 என்ற தற்போதைய நிலையில் இருந்து வாடகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபிஸ்களுக்கான வாடகை உயர்வு
நைட் ஃபிராங்க் (Knight Frank) என்ற அமைப்பு சமீபத்தில் 'ஆசியா பசிபிக் ரிசர்ச், ஆபிஸ் மார்க்கெட்ஸ் - Q1 2026' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆசிய-பசிபிக் பகுதியிலேயே பெங்களூருவில் தான் பிரைம் ஆபிஸ்களுக்கான வாடகை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்த வருடம் வாடகை 14% அதிகரித்துள்ளது. இது ஆசிய-பசிபிக் ஆபிஸ் சந்தையில் இந்தியாவின் வலுவான நிலையைக் காட்டுகிறது. இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களிலும் வாடகை வளர்ச்சி சீராக உள்ளது. இதே காலாண்டில், மும்பையில் 7.5% மற்றும் டெல்லி-NCR-ல் 8.2% வாடகை வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆசிய-பசிபிக் பகுதியில் கண்காணிக்கப்பட்ட 24 முக்கிய நகரங்களில், 18 நகரங்களில் வாடகை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவினாலும், ஒட்டுமொத்தமாக பிராந்திய வாடகை 0.8% உயர்ந்திருக்கிறது.
மும்பை எந்த இடம்?
இந்த வளர்ச்சிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் முக்கிய காரணம் என அறிக்கை கூறுகிறது. 24 நகரங்களில் 18-ல் வாடகை சீராகவோ அல்லது உயர்ந்தோ காணப்படுகிறது. இது 2025-ன் கடைசி காலாண்டில் 17 ஆக இருந்தது. ஆசிய-பசிபிக் பகுதியிலேயே ஹாங்காங் SAR-ல் தான் ஆபிஸ் வாடகை மிக அதிகம். அங்கே ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு USD 158.96 செலவாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லி-NCR தான் காஸ்ட்லியான மார்க்கெட். அங்கே ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு USD 72.33 வாடகை. இது ஆசிய-பசிபிக் அளவில் 6-வது காஸ்ட்லியான இடம்.
இதைத் தொடர்ந்து, மும்பை USD 68.51 வாடகையுடன் 8-வது இடத்திலும், பெங்களூரு USD 36.84 வாடகையுடன் 19-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு, மும்பை, டெல்லி-NCR ஆகிய மூன்று நகரங்களிலும் சேர்த்து, இந்த காலாண்டில் மட்டும் 1.88 கோடி சதுர அடி ஆபிஸ் இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது 2025-ம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3% அதிகம். குறிப்பாக மும்பையில், ஒரே காலாண்டில் 56 லட்சம் சதுர அடி இடம் வாடகைக்கு விடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை
முன்பெல்லாம் பெங்களூருவில் மட்டும் தான் அதிக கவனம் இருக்கும். ஆனால் இப்போது மற்ற நகரங்களிலும் ஆபிஸ் தேவை பரவலாக அதிகரித்திருக்கிறது. GCC எனப்படும் குளோபல் நிறுவனங்களின் மையங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், உள்நாட்டு நிறுவனங்களின் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆபிஸ்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், புதிய கட்டிடங்கள் அந்த அளவுக்கு கட்டப்படவில்லை. டெவலப்பர்கள் பெரும்பாலும் குடியிருப்பு திட்டங்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த காலாண்டில் வெறும் 85 லட்சம் சதுர அடிக்கு தான் புதிய ஆபிஸ் இடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது வாடகைக்கு போன இட அளவில் பாதியை விடக் குறைவு.
பெங்களூரு 14% வாடகை வளர்ச்சி
வாடகைக்கு இடம் தேடுபவர்கள் பெரும்பாலும் பிரைம் ஆபிஸ் கட்டிடங்களையே விரும்புகிறார்கள். GCC நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் ஃப்ளெக்சிபிள் வொர்கிங் ஸ்பேஸ்களின் வருகை இந்த டிரெண்டை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. பெங்களூரு, ஆசியாவிலேயே அதிகபட்சமாக 14% வாடகை வளர்ச்சியைக் கண்டுள்ளது. GCC நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்ததில் 41% பெங்களூருவில் தான். காலி இடங்கள் 11.8% ஆக இருப்பதால், வாடகை இன்னும் உயர வாய்ப்புள்ளது.
சென்னை எந்த இடம்?
மும்பை, சாதனை அளவாக 56 லட்சம் சதுர அடி வாடகைக்கு விடப்பட்டு, 7.5% வாடகை வளர்ச்சியைக் கண்டுள்ளது. 16.2% இடங்கள் காலியாக இருப்பதால், ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ. 4,025 என்ற தற்போதைய நிலையில் இருந்து வாடகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி-NCR-ல் வாடகை வளர்ச்சி சீராக உள்ளது. ஆண்டுக்கு 8.2% உயர்ந்துள்ளது. 14.2% இடங்கள் காலியாக இருப்பதால், ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ. 4,428 என்ற அளவில் வாடகை நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கை பொதுவாக சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் 'பிரைம்' அல்லது 'ஏ-கிரேடு' அலுவலக இடங்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. அந்த வரிசையில் இந்தியாவின் முதல் மூன்று மெகா நகரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அலுவலக வாடகை மற்றும் பரிவர்த்தனை மதிப்பு சற்று குறைவாக இருப்பதால், அது ஆசிய அளவிலான முதல் 24 நகரங்களின் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

