- Home
- Business
- Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
மும்பை-பெங்களூரு இடையே புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ரயில், தற்போதைய 24 மணி நேர பயண நேரத்தை சுமார் 16 முதல் 18 மணி நேரமாக குறையும்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சராசரியாக 4 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். சாதாரண பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என பல்வேறு வகை சேவைகள் மூலம் இந்திய ரயில்வே மக்களுக்கு பயண வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக பேருந்து பயணத்தை விட ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.
குறிப்பாக தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு எப்போதும் தனி மசுவு. இதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருவதால் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, அசாம் மாநிலம் காமக்யா இடையே படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மும்பை-பெங்களூரு இடையே இயக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த புதிய ரயில், கே.எஸ்.ஆர் பெங்களூரு மற்றும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) இடையே இயக்கப்பட உள்ளது. பெங்களூரு சென்ட்ரல் எம்.பி. பி.சி. மோகன், டிசம்பர் 2 அன்று நடந்த தென்மேற்கு ரயில்வே நிலைக்குழு கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பினார். பெங்களூரு-மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். தற்போது ரயில்கள் 24 முதல் 30 மணி நேரமும், பேருந்துகள் 16 முதல் 18 மணி நேரமும் எடுத்துக்கொள்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
பேருந்து வேகத்தில் ஒரு ரயில் வேண்டும் என எம்.பி. பி.சி. மோகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு சாதகமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதிய ரயிலுக்கு அனுமதி கிடைத்த தகவலை எம்.பி.க்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழித்தடத்தில் பல ரயில்கள் ஓடினாலும், உத்யான் எக்ஸ்பிரஸ் மட்டுமே நேரடி இணைப்பை வழங்குகிறது. சுமார் 1,136 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 23 முதல் 24 மணி நேரத்தில் கடக்கிறது. புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகத்தால், பயண நேரம் கணிசமாகக் குறைந்து, பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண நேரம் 16 முதல் 18 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

