வங்கிகள் 4 நாட்கள் இயங்காது.. இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்.. முழு விபரம் இங்கே!
ஐந்து நாள் வேலை வாரம் கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதன் விளைவாக வங்கிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் மூடப்படும். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிகள் 4 நாட்கள் மூடல்
ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் வங்கி பணிகளை திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளில் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அவசர வங்கி பணிகள் உள்ளவர்கள் முன்கூட்டியே அவற்றை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி வேலைநிறுத்தம்
இந்த வேலைநிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக, வங்கி ஊழியர்களின் ஐந்து நாள் வேலை வாரம் கோரிக்கை உள்ளது. தற்போது வங்கிகள் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கின்றன. ஆனால், ஐந்து நாள் வேலை வாரம் அமல்படுத்த வேண்டும் என்பதே சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஜனவரி 27 வங்கி ஸ்ட்ரைக்
ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தம் நடந்தால், அதற்கு முன்பே வங்கிகள் மூன்று நாட்கள் மூடப்படும். ஜனவரி 24 நான்காம் சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26 குடியரசு தினம் ஆகிய காரணங்களால் வங்கிகள் செயல்படாது. இதனைத் தொடர்ந்து 27 அன்று வேலைநிறுத்தம் நடைபெற்றால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்படும். இது பொதுமக்களின் பண பரிவர்த்தனை, காசோலை, கடன், வங்கி சேவைகள் போன்றவற்றால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
5 நாள் வங்கி வேலை முறை
வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு அமைப்பான யூனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), இந்த கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 2024 இல் ஊதிய ஒப்பந்தத்தின் போது, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்வதற்காக தினமும் 40 நிமிடம் கூடுதல் வேலை நேரம் ஏற்கப்பட்டதாகவும், இதனால் மொத்த வேலை நேரத்தில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வங்கி விடுமுறை
மேலும், ரிசர்வ் வங்கி, எல்ஐசி, ஜிஐசி, பங்குச் சந்தைகள், வெளிநாட்டு நாணய சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே ஐந்து நாள் வேலை முறையில் இயங்கி வருவதை UFBU சுட்டிக்காட்டியுள்ளது. மாநில மற்றும் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் மட்டும் விதிவிலக்காக இருப்பதற்கு காரணம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 27, 2026 அன்று நாடு முழுவதும் வங்கிகளில் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதைத் தீர்மானிக்கும் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

