வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டேக் வாங்குறது ஈசி
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தியாக மாறியுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களின் நேர விரயம் குறையும்.

பிப்ரவரி 1 முதல் புதிய விதிகள்
இந்தியாவில் கார் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் நடைமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026 பிப்ரவரி 1 முதல், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளில் ‘உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்’ (KYV) என்ற சரிபார்ப்பு முறையை முழுமையாக நீக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், டேக் வாங்கிய பின் ஏற்படும் தாமதங்களும் தேவையற்ற பின்தொடர்தல்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, ஃபாஸ்டேக் வழங்கப்பட்ட பிறகு KYV சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
சரியான ஆவணங்கள் இருந்தபோதிலும், வாகன உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைப் பதிவேற்றுதல், வாகனப் புகைப்படங்களை அனுப்புதல், டேக்கைச் சரிபார்ப்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த நடைமுறை பலருக்கு நேரமும் மன அழுத்தமும் ஏற்படுத்தியது. இதைத் தீர்க்க, இனிமேல் டேக் வழங்குவதற்கு முன்பே அனைத்து சரிபார்ப்புகளையும் வங்கிகள் மேற்கொள்ளும் வகையில் NHAI மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் மாற்றம்
KYV என்பது ஃபாஸ்டேக் சரியான வாகன எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா, போலி அல்லது நகல் டேக் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சரிபார்ப்பு படியாகும். பாதுகாப்பு நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முறை, நடைமுறையில் பலருக்கு இடையூறாக மாறியது. அதனால், சரிபார்ப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, டேக் வழங்கும் முன்பே வங்கிகள் வாஹன் தரவுத்தளத்தின் மூலம் வாகன விவரங்களை சரிபார்ப்பது கட்டாயமாகிறது.
ஃபாஸ்டேக் சரிபார்ப்பு மாற்றம்
வாஹனில் தகவல் கிடைக்காத பட்சத்தில், RC (பதிவுச் சான்றிதழ்) அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும். இதனால், டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு தனியாக KYV செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஏற்கனவே ஃபாஸ்டேக் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இது நல்ல செய்தி. இனி வழக்கமாக KYV தேவையில்லை. டேக் தளர்வாக இருப்பது, தவறான வாகனத்துடன் இணைக்கப்பட்டது, தவறாகப் பயன்படுத்தப்பட்டது போன்ற குறிப்பிட்ட புகார் இருந்தால் மட்டுமே KYV மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ஃபாஸ்டேக் செயல்முறை வேகமாகவும் எளிதாகவும் மாறி, டேக் வாங்கிய உடனேயே பயன்படுத்தும் வசதி கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

