90% ஹெல்த் ஆப்கள் பயன்பாடு அதிகரிப்பு: ஆரோக்கிய பழக்கங்களில் நடக்கும் அதிரடி மாற்றம்!
இந்தியர்களின் ஆரோக்கிய பழக்கங்களில் பெரும் மாற்றம். 90% பேர் ஹெல்த் ஆப் பயன்பாடு, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஏ.ஐ சுகாதார உதவி குறித்து PwC வெளியிட்டுள்ள 2026 ஆய்வின் முக்கிய தகவல்களை பற்றி பார்ப்போம்.

ஹெல்த் ஆப் & ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு
இந்திய நுகர்வோர் நோய்க்கான சிகிச்சையை மட்டுமே சார்ந்திருப்பதிலிருந்து மாறி, வருமுன் காக்கும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆரோக்கிய மேலாண்மையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றனர். பிடபிள்யூசி (PwC) வெளியிட்டுள்ள ‘வாய்ஸ் ஆஃப் தி கன்ஸ்யூமர் 2026: இந்தியா பர்ஸ்பெக்டிவ்’ (Voice of the Consumer 2026: India perspective) ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் 27 நாடுகளைச் சேர்ந்த 21,808 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவின் 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,005 நுகர்வோர் பங்கேற்றனர்.
டிஜிட்டல் ஆரோக்கியமும் ஏ.ஐ (AI) பயன்பாடும்
உலகளவில் சுமார் 80%-த்தினர் ஹெல்த் ஆப்கள் அல்லது அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களைப் (Wearables) பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 90% ஆக உள்ளது. மேலும், ஏதேனும் ஒரு ஆரோக்கியம் சார்ந்த செயல்பாட்டிற்கு ஏ.ஐ (AI) உதவுவதை 90%-த்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக, மருத்துவர்களால் சரிபார்க்கப்பட்டு நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ஸ்மார்ட் சாதனங்களின் தரவுகளுக்காக அதிகக் கட்டணம் செலுத்த 81% இந்தியர்கள் தயாராக உள்ளனர்.
உடற்பயிற்சி & ஆரோக்கியச் சவால்கள்
உலகளவில் 19%-த்தினர் மட்டுமே தினமும் உடற்பயிற்சி செய்யும் நிலையில், இந்தியாவில் 42% நுகர்வோர் தினமும் உடற்பயிற்சி செய்கின்றனர். உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மனநலம் மற்றும் தடுப்புப் பராமரிப்பு ஆகியவை அன்றாட ஆரோக்கியத்தின் ஒன்றோடொன்று இணைந்த அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், ஆரோக்கிய இலக்குகளைக் கொண்ட 67% இந்தியர்கள் மன அழுத்தம், சோர்வு அல்லது குறைந்த ஆற்றல் ஆகியவற்றைத் தடையாகக் குறிப்பிட்டுள்ளனர். அதிகப்படியான தகவல்கள் மற்றும் பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள சிரமங்களும் சவால்களாக உள்ளன.
மருத்துவ வழிகாட்டுதல் & ஊட்டச்சத்து
சர்க்கரை நோய், எடை மேலாண்மைக்குப் பயன்படுத்தப்படும் ஜிஎல்பி-1 (GLP-1) சிகிச்சை முறைகள் மீதான ஆர்வம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. உலகளவில் 10%-த்தினர் இம்மருந்துகளைப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் 18%-த்தினர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 80%-த்தினர் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். டிஜிட்டல் சுகாதாரம் வளர்ந்தாலும், குடும்பத்தினர், உள்ளூர் மருந்தகங்கள் மற்றும் கட்டுப்படியாகும் விலை ஆகியவையே இந்தியர்களின் வாங்கும் முடிவுகளைத் தொடர்ந்து தீர்மானிக்கின்றன என இவ்வறிக்கை கூறுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.














