சீனியர் சிட்டிசன்களுக்கு எக்கச்செக்க வட்டி! முதுமையில் அதிக வருவாய்க்கு கேரண்டி கொடுக்கும் திட்டங்கள்!
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பிக்ஸட் டெபாசிட், ரிசர்வ் வங்கி பத்திரங்கள் போன்ற திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் கொடுக்கும் திட்டங்களாக உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
இது ஒரு தபால் அலுவலகத் திட்டமாகும். இதில் ஒரு முறை அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். இத்திட்டத்தில் 8.2 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம் ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். அதற்குப் பிறகும் கணக்கை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகையும் பெறலாம்.
எஸ்.டபிள்யூ.பி. திட்டங்கள் (SWP)
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானம் ஈட்ட இது ஒரு வழிமுறை ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்தத் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையைத் திரும்பப் பெறலாம். அதாவது டெபாசிட் தொகையின் கூட்டு வளர்ச்சியைப் பொறுத்து திரும்பப் பெறும் தொகை இருக்கும். வளர்ச்சி விகிதத்தைவிட, திரும்பப் பெறும் விகிதம் குறைவாக இருந்தால், பல ஆண்டுகளுக்கு இதன் மூலம் மாத வருமானத்தைப் பெறலாம்.
நிலையான வைப்பு நிதி (FD)
பிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத் திட்டங்கள் வங்கிகள், சிறிய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் உள்ளன. ஓராண்டு முதல் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C மூலம் வரிச் சலுகையும் கிடைக்கும். இதில் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டி வருமானமாகக் கிடைக்கும். முதிர்ச்சி அடையும்போது, அசல் தொகையையும் திரும்பப் பெறலாம்.
தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு (MIS)
இதுவும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்தான். இதில் ஒருவர் தனியாகவோ வேறொருவருடன் சேர்ந்து கூட்டாகவோ கணக்கு வைத்திருக்கலாம். ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரை ஒருமுறை டெபாசிட் செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் மாதந்தோறும் 7.4 சதவீத வட்டி கிடைக்கும். தனிநபர் கணக்கில் 5,550 ரூபாய் வரை மாத வருமானம் பெறலாம். கூட்டுக் கணக்கில், அதிகபட்ச மாத வருமானம் 9,250 ரூபாய்.
ரிசர்வ் வங்கி பத்திரங்கள்
ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பத்திரங்கள் 8.05 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகின்றன. 7 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்பட்டது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு தோறும் இந்த பத்திரங்கள் மீதான வட்டி செலுத்தப்படும். பொதுவாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் வட்டி வழங்கப்படும். இந்தப் பத்திரங்களில் ஈட்டும் வருவாய் மீது வரி விதிக்கப்படும்.