நிர்மலா சீதாராமன் ஏன் சிவப்பு புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்? அதை பரிசளித்தது யார் ? இதோ முழுபின்னணி..
பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு வண்ண கைத்தறி புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையை மத்திய அமைச்சர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்துள்ளார். இதில் ஏழு முன்னுரிமைகளை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலில் தான் மொத்த நாடும் கவனம் கொண்டுள்ளது. அத்துடன் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சேலையும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவைகள் கவனம் ஈர்க்கும். அவர் கைத்தறி புடவைகளையே அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். இந்த முறை அவர் அணிந்திருந்த புடவையின் பருத்தியுடன் பட்டு கலந்திருந்தது. கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் நவ்லகுண்டாவின் பிரபல எம்ப்ராய்டரி கலையால் இந்த புடவை நெய்யப்பட்டுள்ளது.
இந்த புடவையை மத்திய அமைச்சர் ஒருவர் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்பளிப்பாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபுரம், மயில், தாமரை ஆகிய கை வேலைப்பாடுகள் நிறைந்த அழகான அந்த புடவையை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது குறித்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
budget 2021 : Nirmala Sitharaman Budget Saree
நிர்மலா சீதாராமனுக்கு சிவப்பு வண்ணம் அதிர்ஷ்ட நிறமாக தெரிகிறது. ஒவ்வொரு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதெல்லாம் சிவப்பு நிறம் பிரதானமாக இருப்பதை நாம் பார்க்கமுடியும். அதுமட்டுமின்றி சில முக்கிய தினங்களில் கூட அவர் சிவப்பு நிற சேலை அணிகிறார். சிவப்பு நிறம் அன்பு, பொறுப்பு, வலிமை, தைரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்து கலாச்சாரப்படி, சிவப்பு நிறமானது பெண்ணின் சக்தியும் வலிமையுமாக உருவகப்படுத்தப்படும் துர்கா தேவியை குறிக்கிறது.
budget 2019: Nirmala Sitharaman Budget Saree
2019ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அடர் இளஞ்சிவப்பு மங்கல்கிரி புடவையில் காட்சியளித்தார். 2020இல் மஞ்சள் காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் கவனம் ஈர்த்தார். 2021ஆம் ஆண்டில், நிர்மலா சீதாராமன் பிரபலமான போச்சம்பள்ளி சேலையை அணிந்திருந்தார். 2022ஆம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அவர் ப்ரவுன் நிற புடவை அணிந்திருந்தார். இந்தப் புடவை போம்காய் அல்லது சோன்புரி புடவை என்றும் அழைக்கப்படுகிறது.