- Home
- Auto
- ஹீரோ விடா முதல் ஏத்தர் ரிஸ்தா வரை: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
ஹீரோ விடா முதல் ஏத்தர் ரிஸ்தா வரை: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 67.49% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதில் டிவிஎஸ் ஐக்யூப் மாடல் 45,320 யூனிட்டுகள் விற்பனையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்கள்
கடந்த செப்டம்பர் 2026-ல் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்துள்ள டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகாரப்பூர்வ விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தை ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 1,11,463 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பரில் 67.49% பிரமமாண்ட வளர்ச்சியைப் பெற்று மொத்தம் 1,86,692 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் இ-ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்கப்பட்ட டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனைப் பட்டியல்களை பற்றி பார்போம்.
டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)
இந்திய மின்சார வாகன சந்தையில் பஜாஜ் சேத்தக் மாடலைப் பின்னுக்குத் தள்ளி டிவிஎஸ் ஐக்யூப் கடந்த செப்டம்பர் மாதத்தில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 45,320 யூனிட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 30,820 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 47.05% கூடுதலான விற்பனை வளர்ச்சி ஆகும். மேலும், முந்தைய ஆகஸ்ட் மாத விற்பனையை விட 5.69% மாதாந்திர வளர்ச்சியையும் இது பெற்றுள்ளது.
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak)
உறுதியான மெட்டல் பாடி மற்றும் பாரம்பரியமான தோற்றத்திற்குப் பெயர்பெற்ற பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த விற்பனைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 42,394 யூனிட்டுகள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.73% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 52,248 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இதன் மாதாந்திர விற்பனை 18.86% சரிவடைந்துள்ளது.
ஹீரோ விடா (Hero Vida)
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தயாரிக்கும் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல், ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பரில் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 28,862 யூனிட்டுகள் விற்பனையாகி சந்தையில் தனது பங்கை பலப்படுத்திக் கொண்டுள்ளது.
ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta)
குடும்பப் பயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக இடவசதியுடன் உருவாக்கப்பட்ட ஏத்தர் ரிஸ்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த டாப் விற்பனைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 19,813 யூனிட்டுகள் விற்பனையாகி நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபித்துள்ளது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter)
டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு நவீன மின்சார வாகனத் தயாரிப்பான புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக வேகமான வரவேற்பைப் பெற்று டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 17,027 யூனிட்டுகள் விற்பனையாகி ஐந்தாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஒட்டுமொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை கடந்த ஆண்டை விடப் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும், முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாத விற்பனை லேசான சரிவைச் சந்தித்துள்ளது.








