Toyota Innova Crysta : இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் விற்பனையை ஸ்டாப் பண்ண உள்ளதா டொயோட்டா?
Toyota Innova Crysta Discontinuation Rumors : டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலை நிறுத்தப் போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Toyota Innova Crysta Diesel
நீங்கள் ஒரு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஃபேன் என்றால், உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ் இருக்கு. டொயோட்டா தனது பிரபலமான MPV காரான இன்னோவா க்ரிஸ்டாவை நிறுத்தப் போவதாக சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. நீண்ட தூர பயணங்களுக்கு க்ரிஸ்டாவின் டீசல் மாடலை நம்பியிருக்கும் பலருக்கும் இந்த செய்தி ஒருவித கவலையை ஏற்படுத்தியது. வரவிருக்கும் கடுமையான மாசு விதிகள் காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுக்கலாம் என்றும் வதந்திகள் கிளம்பின. ஆனால், இந்த அத்தனை வதந்திகளுக்கும் டொயோட்டா நிறுவனம் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கம்பெனி என்ன சொல்லுது?
இந்த குழப்பங்களுக்கு மத்தியில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் நாட்டுத் தலைவரும், நிர்வாக துணைத் தலைவருமான விக்ரம் குலாத்தி, உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். 'ஆட்டோ டுடே' இதழுக்கு அளித்த பேட்டியில், இன்னோவா க்ரிஸ்டா நிறுத்தப்படுவது மற்றும் டீசல் இன்ஜின்களில் இருந்து மாறுவது குறித்து கேட்டபோது, "அதெல்லாம் வெறும் வதந்தின்னு தான் நான் நினைக்கிறேன்" என்று வெளிப்படையாகக் கூறினார். குலாத்தியின் இந்த ஒரு பதில், பல நாள் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டீசல் கார்களுக்கு இன்னும் மவுசு இருக்கு!
இந்தியாவில் டீசல் கார்களுக்கு இன்னும் வலுவான டிமாண்ட் இருப்பதாக விக்ரம் குலாத்தி விளக்கினார். குறிப்பாக, நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் அதிக டார்க், பவர் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மத்தியில் டீசல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. "டீசல் வண்டிதான் வேணும்னு கேக்குற கஸ்டமர்ஸ் இன்னும் மார்க்கெட்ல இருக்காங்க" என்று அவர் கூறினார். சந்தையில் பல மாற்றங்கள் வந்தாலும், இன்னோவா க்ரிஸ்டாவின் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை என்றும், அவர்கள் வேறு ஒரு மாற்றை தேடவில்லை என்றும் டொயோட்டா நம்புகிறது.
டீசல் வண்டிகளின் சூப்பர் பெர்ஃபாமென்ஸ்
டீசல் இன்ஜின்கள் என்றாலே அதிக மாசுவை வெளியிடும் என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அந்தக் கருத்தையும் குலாத்தி உடைத்தெறிந்தார். BS6 மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, டீசல் கார்கள் கிட்டத்தட்ட பெட்ரோல் அல்லது சிஎன்ஜி கார்களைப் போலவே சுத்தமாகிவிட்டன என்று அவர் கூறினார். இப்போது, மாசுக் கட்டுப்பாட்டில் எல்லாமே ஒன்றுதான். மேலும், டீசல் கார்கள் சிறந்த செயல்திறனையும், நல்ல மைலேஜையும் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொயோட்டாவின் பெரிய பிளான்
நாட்டில் பல முன்னணி கார் நிறுவனங்கள் டீசல் மாடல்களை முழுவதுமாக நிறுத்திவிட்ட நிலையில், டொயோட்டாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் டொயோட்டாவின் திட்டம் சற்று வித்தியாசமானது. எலக்ட்ரிக் கார்கள், ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல், ஹைட்ரஜன் டெக்னாலஜி என பலவற்றிலும் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. அதே சமயம், ஒரே ஒரு எரிபொருளை மட்டும் நம்பி இருக்க அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவின் ஆட்டோமொபைல் எதிர்காலம் முழுவதுமாக எலக்ட்ரிக் மயமாக இருக்காது, அது ஒரு "மல்டி-ஃபியூவல்" சிஸ்டமாக இருக்கும் என்று குலாத்தி தெளிவுபடுத்தினார். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, ஹைப்ரிட் என அனைத்துமே தத்தமது பங்களிப்பைச் செய்யும் என்பதுதான் நிறுவனத்தின் பார்வை.

