SUV Sales: எஸ்யூவி மார்க்கெட்டில் தலைகீழ் மாற்றம்; அதிகம் சேல்ஸ் ஆன SUV எது தெரியுமா?
Top Selling SUV in June : ஜூன் மாத எஸ்யூவி விற்பனையில் டாடா பஞ்ச் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. மே மாதம் முதலிடத்தில் இருந்த மாருதி ஃபிராங்க்ஸ் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Top Selling SUV
இந்தியாவின் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஜூன் மாதம் ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. மே மாதம் அதிகம் விற்பனையான எஸ்யூவி என்ற பெருமையைப் பெற்ற மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ், ஜூன் மாதம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், டாடா மோட்டார்ஸின் பஞ்ச் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. டாடா நெக்ஸான் இரண்டாவது இடத்தையும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஜூன் மாத விற்பனை புள்ளிவிவரங்களின்படி, டாடா பஞ்ச் 21,006 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,446 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 101.09% அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டாடா நெக்ஸான் 18,335 யூனிட்களை விற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது கடந்த ஆண்டை விட 58.03% வளர்ச்சி.
சரிவை சந்தித்த ஃபிராங்க்ஸ்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 14,097 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த மாடல் 10.65% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மே மாதம் நாட்டின் டாப் செல்லிங் காராக இருந்த மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ், ஜூன் மாதம் 13,135 யூனிட்களை மட்டுமே விற்று நான்காவது இடத்திற்கு சரிந்தது. ஆனாலும், கடந்த ஆண்டை விட இந்த மாடல் 33.83% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஹூண்டாய் வென்யூ 10,776 யூனிட்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இது 57.13% வருடாந்திர வளர்ச்சியாகும். மஹிந்திரா XUV 3XO 10,063 யூனிட்களை விற்று ஆறாவது இடத்தையும், மாருதி கிராண்ட் விட்டாரா 10,035 யூனிட்களுடன் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மாருதி பிரெஸ்ஸா நிலைமை என்ன?
ஒரு காலத்தில் இந்த பிரிவில் மிகவும் வலுவான மாடல்களில் ஒன்றாக இருந்த மாருதி பிரெஸ்ஸா, ஜூன் மாதம் 9,939 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14,507 யூனிட்கள் விற்பனையான நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க சரிவாகும்.
கியா செல்டோஸ் 9,654 யூனிட்கள் விற்பனையுடன் ஒன்பதாவது இடத்தையும், மஹிந்திரா XUV700 9,244 யூனிட்களுடன் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. செல்டோஸ் 84.77% மற்றும் XUV700 49.14% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாட்டின் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றான ஹூண்டாய் கிரெட்டா, ஜூன் மாதத்திற்கான டாப்-10 பட்டியலில் இடம் பிடிக்கத் தவறியுள்ளது. அதே நேரத்தில், மாருதி சுஸுகியின் ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா என மூன்று மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

