இனி ஹைவேயில் விலங்கு வந்தா.. மொபைலில் அலர்ட் வரும்… NHAI சூப்பர் திட்டம்!!
தேசிய நெடுஞ்சாலைகளில் விலங்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலங்கு எச்சரிக்கை அமைப்பு
இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் திடீரென சாலையில் குறுக்கே வருகிற தெருவிலங்குகள், ஓட்டுநர்களுக்கு பெரும் அபாயமாக மாறி வருகிறது. குறிப்பாக வெளிச்சம் குறைவான நேரங்களில் விலங்குகளை கவனிக்க முடியாமல் போவது, பல கடுமையான விபத்துகளுக்கு காரணமாகிறது. இந்த சாலைப் பாதுகாப்பு சவாலைக் குறைக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, விபத்து நடக்காமலே தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்நேர எச்சரிக்கை
சாலைப் பாதுகாப்பு மாதம் 2024 நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, “நிகழ்நேர தெரு விலங்கு எச்சரிக்கை அமைப்பு” என்ற முன்னோட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் ஜெய்ப்பூர்–ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர்–ரேவாரி தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக கால்நடைகள் அதிகமாக சுற்றித் திரியும், விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அந்த இடங்களில் இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு “இங்கே விலங்குகள் வரும் வாய்ப்பு அதிகம்” என்ற தகவல் முன்பே கிடைக்கிறது.
மொபைலில் அலர்ட்
இந்த அமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், வாகனம் அந்த ஆபத்தான பகுதிக்கு நெருங்கும் போது ஓட்டுநரின் மொபைல் எண்ணிற்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் எச்சரிக்கை அனுப்பப்படும். முதலில் ஒரு ஃபிளாஷ் எஸ்எம்எஸ் வரும். அதன் பின் அதே தகவலுடன் ஒரு குரல் எச்சரிக்கையும் வரும். இதனால் ஓட்டுநர் வேகத்தை குறைத்து, கூடுதல் கவனத்துடன் ஓட்ட முடியும். மேலும், ஒரே நபருக்கு தொடர்ந்து எச்சரிக்கை வராமல் இருக்க 30 நிமிடங்களுக்குள் மீண்டும் அனுப்பப்படாது என்ற விதியும் இதில் உள்ளது.
இரவு நேர ஓட்டுதல் பாதுகாப்பு
இந்த முயற்சி ஏன் அவசியம் என்றால், இந்தியாவில் சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாக இருப்பது, அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பது அரசுத் தரவுகள் மூலம் தெரிய வருகிறது. குறைந்த வெளிச்சம், பனி, மழை போன்ற சூழல்களில் விலங்குகள் திடீரென சாலையில் தோன்றுவது வட இந்திய நெடுஞ்சாலைகளில் பெரிய அபாயமாக பார்க்கப்படுகிறது. இந்த முன்னோட்டத் திட்டத்தின் முடிவுகள் நேர்மறையாக இருந்தால், விலங்கு விபத்துக்கள் அதிகம் உள்ள பிற நெடுஞ்சாலைகளிலும் இதை விரிவாக்க NHAI திட்டமிட்டுள்ளது.

