Maruti Price Hike: மாருதி கார் வாங்கப் போறீங்களா?.. ஜூனில் விலை ஷாக் காத்திருக்கிறது!
Maruti Price Hike: மாருதி சுசுகி கார்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 2026 முதல் பல மாடல்களின் விலை உயரலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூனில் மாருதி கார்களுக்கு ஷாக்
இந்திய கார் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ள மாருதி சுசுகி, வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் ஜூன் 2026 முதல் புதிய விலை அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜூன் முதல் விலை மாற்றம்
மாருதி வெளியிட்ட தகவலின்படி, மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து சுமார் ரூ.30,000 வரை விலை உயர்வு இருக்கலாம். இந்த மாற்றத்திற்கு உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததும், சந்தையில் நீடிக்கும் பணவீக்க அழுத்தமும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன. குறிப்பாக கச்சாப் பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்திருப்பது நிறுவனங்களின் செலவுகளை உயர்த்தியுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
மாருதி கார் விலை உயர்வு அறிவிப்பு
இந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு மாருதி விலையை உயர்த்துவது இது இரண்டாவது முறையாகும். நிறுவனம் விரைவில் திருத்தப்பட்ட விலைப்பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை மாற்றம் சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் அல்லாமல், என்ட்ரி-லெவல் முதல் ப்ரீமியம் பிரிவுகள் வரை அனைத்தையும் பாதிக்கக்கூடும்.
ஆல்டோ முதல் பிரெஸ்ஸா வரை விலை உயர்வு
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற பொதுமக்கள் அதிகம் விரும்பும் மாடல்களும் இந்த பட்டியலில் அடங்கும். அதேபோல் பலேனோ, ஃபிரான்க்ஸ், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ போன்ற உயர்நிலை மாடல்களுக்கும் புதிய விலை அமலாகும். தற்போது மாருதி கார்கள் ரூ.3.70 லட்சம் முதல் ரூ.28.61 லட்சம் வரை விற்பனையாகி வருகின்றன.
மாருதி ரசிகர்கள் கவனத்திற்கு
இந்த அறிவிப்பு மாருதியை மட்டுமல்ல, இந்திய கார் சந்தையின் அடுத்த கட்ட நகர்வையும் சுட்டிக்காட்டுகிறது. பிற உற்பத்தியாளர்களும் செலவு அழுத்தங்களை சமாளிக்க விலை மாற்றங்களை பரிசீலிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால் கார் வாங்க நினைப்பவர்கள், அடுத்த சில வாரங்களை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

