- Home
- Auto
- Maruti : ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.... அனைத்து கார்களின் விலையை கிடுகிடுவென உயர்த்தும் மாருதி சுஸுகி..!
Maruti : ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.... அனைத்து கார்களின் விலையை கிடுகிடுவென உயர்த்தும் மாருதி சுஸுகி..!
Maruti Cars Price Hike : உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதால், மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை ₹30,000 வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு ஆகஸ்ட் 2026 முதல் அமலுக்கு வரும்.

Maruti Cars Price Hike
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 2026 முதல் தங்கள் நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையையும் ₹30,000 வரை உயர்த்தப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக்கு (NSE) அளித்த அறிக்கையில், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, செலவுகளைக் குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த விலை உயர்வின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், இந்த செலவு உயர்வின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. "உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எங்கள் மாடல்களின் விலையை ₹30,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயர்வு ஆகஸ்ட் 2026 முதல் அமலுக்கு வரும்" என அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை உயர்வு ஏன்?
செலவுகளைக் குறைக்கும் முயற்சிகள் மூலம் கடந்த சில மாதங்களாக விலை உயர்வின் தாக்கத்தை முடிந்தவரை தாங்களே ஏற்றுக்கொண்டதாக நிறுவனம் மேலும் கூறியது. ஆனால், தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பை உறுதிசெய்துகொண்டே, செலவு உயர்வின் ஒரு பகுதியை அவர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மாருதி சுசுகி விளக்கியுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து மாடல்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது; ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப மாறுபடும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2026 முதல் மாருதி சுசுகியின் அனைத்து கார்களுக்கும் இந்த விலை மாற்றம் பொருந்தும்.
விற்பனை சரிய வாய்ப்பு
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கு விலை 0.9 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் ஒரு பங்கின் விலை ₹13,640 ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் விளைவாக, கார்களின் விலை கணிசமாக குறைந்து இருந்தது. அதனால் கார் வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்தது. ஆனால் தற்போது கார்களின் விலையை அதிகரித்துள்ளதால், மாருதி கார்களின் விற்பனை சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டஃப் கொடுக்கும் டாடா
கார் விற்பனையில் ஆண்டுதோறும் முதலிடத்தை பிடித்து வருகிறது மாருதி. இந்த ஆண்டும் மாருதி கார்களே இதுவரை விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகின்றன. அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் டாடா கார்களின் விற்பனையும் இந்த ஆண்டு மளமளவென உயர்ந்துள்ளது. குறிப்பாக டாடா நிறுவனம் இந்த ஆண்டு சியாரா காரை அறிமுகம் செய்ததோடு அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் அறிமுகப்படுத்தி மாஸ் காட்டி வருகிறது. மாருதி நிறுவனம் இந்த போட்டிக்கு டஃப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

