கிராமம் முதல் சிட்டி வரை.. அதிக பேர் வாங்கிய மலிவு பைக் இதுதான்.. டாப் 5 லிஸ்ட் இங்கே
2025 நவம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தை 22.5% வளர்ச்சி கண்டது, இதில் முதல் 10 மாடல்கள் 13.26 லட்சம் யூனிட்கள் விற்பனையாகின. இந்த பட்டியலை விரிவாக இங்கு காண்போம்.

அதிகம் விற்பனையான பைக்குகள்
2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவின் இருசக்கர சந்தை சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்திய இரு சக்கர வாகன சந்தை-இல் அதிகம் விற்பனையான முதல் 10 மாடல்களின் மொத்த விற்பனை 13.26 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 10.83 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 22.5 சதவீத ஆண்டு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பயன்பாட்டுக்கு ஏற்ற, குறைந்த விலையில் கிடைக்கும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
ஹீரோ ஸ்ப்ளெண்டர்
இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது Hero MotoCorp-ன் ஹீரோ ஸ்ப்ளெண்டர். 2025 நவம்பரில் மட்டும் இந்த பைக் 3,48,569 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டைவிட 18.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் நீண்ட காலமாக நம்பிக்கையான பைக்காக இருப்பதால், ஸ்ப்ளெண்டர் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக தொடர்கிறது.
ஹோண்டா ஆக்டிவா
இரண்டாம் இடத்தில் ஹோண்டா ஆக்டிவா இடம்பிடித்துள்ளது. நவம்பர் மாதத்தில் 2,62,689 யூனிட்கள் விற்பனையாகி, 27 சதவீத ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நம்பகத்தன்மை, வலுவான பிராண்டு இமேஜ் மற்றும் பல்வேறு வேரியண்ட்கள் காரணமாக இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக திகழ்கிறது.
ஹோண்டா ஷைன்
மூன்றாவது இடத்தை ஹோண்டா ஷைன் பிடித்துள்ளது. இந்த பைக் 1,86,490 யூனிட்கள் விற்பனையாகி, 28.1 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 1,24,782 யூனிட்கள் விற்பனையாகி, 25.1 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவின் இரண்டாவது அதிகம் விற்பனையான ஸ்கூட்டராக உள்ளது.
பஜாஜ் பல்சர்
ஐந்தாம் இடத்தில் பஜாஜ் பல்சர் 1,13,802 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஆண்டு அடிப்படையில் 0.6 சதவீத சிறிய சரிவு இருந்தாலும், ஸ்போர்ட்டி பைக் பிரிவில் புல்சரின் பிடிப்பு இன்னும் வலுவாகவே உள்ளது. இதேபோல், Hero HF Deluxe 91,082 யூனிட்கள் விற்பனையாகி, 48.7 சதவீத அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறைந்த விலை மற்றும் நம்பகமான செயல்திறன் காரணமாக, பட்ஜெட் வாடிக்கையாளர்களிடம் இந்த பைக் தொடர்ந்து வரவேற்பைப் பெறுகிறது.

