- Home
- Auto
- இனி அனைத்து கார்களிலும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக் கட்டாயம்... விபத்தை குறைக்க மத்திய அரசு திட்டம்!
இனி அனைத்து கார்களிலும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக் கட்டாயம்... விபத்தை குறைக்க மத்திய அரசு திட்டம்!
புதிய மாடல் கார்களுக்கு அக்.1, 2030 முதலும், ஏற்கனவே சந்தையில் உள்ள பழைய மாடல் கார்களுக்கு அக்.1, 2032 முதலும் AEBS கட்டாயமாகிறது. ஏற்கனவே இந்த அமைப்பைக் கொண்ட வாகனங்களுக்கு அக்.1, 2028 முதல் புதிய தரநிலைகள் (AIS-185) பொருந்தும்.

அனைத்து கார்களிலும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக் கட்டாயம்
இந்தியாவில் சிறிய ரக கார்களில் தொடங்கி பெரிய ரக சொகுசு வாகனங்கள் வரை உற்பத்தியும், அவற்றை வாங்கும் பயனாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் ஒருபுறமிருக்க, சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், விபத்துகளைத் தடுக்கவும் மோதலின் தாக்கத்தைக் கணிசமாகக் குறைக்கவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) மிக முக்கியமான பாதுகாப்பு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 1, 2032-க்குள் 'M1' வகைப்பாட்டில் உள்ள அனைத்து பயணிகள் வாகனங்களிலும் 'மேம்பட்ட அவசர கால பிரேக்கிங் அமைப்பு' (Advanced Emergency Braking System - AEBS) கட்டாயமாக்கப்பட அரசு முன்மொழிந்துள்ளது. இந்த வரைவு விதிகள் அங்கீகரிக்கப்பட்டால், 2028-ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை படிப்படியாக அமலுக்கு வரும்.
'M1' ரக வாகனங்களுக்கான கால அட்டவணை
'M1' வகை வாகனங்கள் என்பது ஓட்டுநர் இருக்கையைத் தவிர்த்து, அதிகபட்சமாக 8 சீட் கொண்ட அனைத்து பயணிகள் அமரும் கார்களைக் குறிக்கும். அக்டோபர் 1, 2030 முதல் தயாரிக்கப்படும் அனைத்துப் புதிய மாடல் 'M1' வகை வாகனங்களிலும் AEBS பாதுகாப்பு அம்சம் பொருத்தப்படுவது கட்டாயமாகும். அக்டோபர் 1, 2032 முதல் ஏற்கனவே சந்தையில் விற்பனையில் இருக்கும் பழைய மாடல் பயணிகள் வாகனங்களுக்கும் இந்த விதி முழுமையாகப் பொருந்தும்.
இந்தியாவில் வாகனப் பாதுகாப்புத் தரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக, 'மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989' (CMVR)-ல் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த வரைவு அறிவிப்பு பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் தங்களது ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் அரசுக்குச் சமர்ப்பிக்கலாம்.
2028 முதல் அமலாகும் AEBS இணக்க விதிகள்
ஏற்கனவே 'மேம்பட்ட அவசர கால பிரேக்கிங் அமைப்பைக்' (AEBS) கொண்டுள்ள வாகனங்களுக்கு முன்கூட்டியே புதிய இணக்க விதிகள் பொருந்தும். அக்டோபர் 1, 2028 முதல், AEBS வசதியுடன் வரும் 'M1' வகை பயணிகள் வாகனங்கள் மற்றும் 3.5 டன் வரையிலான மொத்த எடை கொண்ட 'N1' வகை இலகுரக சரக்கு வாகனங்கள், 'AIS-185' எனப்படும் வாகனத் தொழில் தரநிலைக்கு (Automotive Industry Standard) உட்பட்டு இருக்க வேண்டும்.
சென்சார்கள் மற்றும் பிற நவீன கண்டறிதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்படும் AEBS, விபத்து அல்லது மோதல் ஏற்படும் சூழலைக் கண்டறிந்து, ஓட்டுநர் சரியான நேரத்தில் செயல்படத் தவறும்போது தானாகவே பிரேக்குகளை இயக்கும். இது விபத்தைத் தவிர்க்கவும், மோதலின் வேகத்தைக் குறைத்து உயிர்ச்சேதத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் 50% குறைக்க இலக்கு வைத்துள்ள மத்திய அரசுக்கு, உற்பத்தியாளர்கள் இந்த மாற்றத்திற்குத் தயாராகப் போதிய கால அவகாசம் அளிக்கும் வகையிலும் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஸ்டியரிங் & லேன்-கீப்பிங் செட்டிங் புதிய விதிகள்
ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் வசதியைத் தாண்டி, ஸ்டியரிங் தொடர்பான புதிய பாதுகாப்பு விதிகளையும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அக்டோபர் 1, 2027 முதல் மோட்டார் வாகனங்களின் ஸ்டியரிங் செயல்பாடு 'AIS-193' தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனினும் மோட்டார் சைக்கிள்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் மற்றும் ஸ்டியரிங் இல்லாத 3 சக்கர வாகனங்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது.
அக்.1, 2027 முதல் தானியங்கி கட்டளை ஸ்டியரிங் செயல்பாடுகள் (ACSF) கொண்ட வாகனங்கள் உரிய தரநிலைக்கு உட்பட வேண்டும்; 'அவசரகால வழித்தட பராமரிப்பு அமைப்பு' (ELKS) பொருத்தப்பட்ட வாகனங்கள் 'AIS-191 (பகுதி 1)'-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அக்.1, 2029 முதல் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை/போக்குவரத்து வாகனங்களாகப் பதிவுசெய்யப்படும் M1 வகை வாகனங்களுக்கு ACSF மற்றும் ELKS அமைப்புகள் கட்டாயமாக்கப்படவுள்ளன. அத்துடன், ஓட்டுநரின் தூக்கத்தைக் கண்டறியும் மற்றும் கவனக்குறைவை எச்சரிக்கும் அமைப்புகளும் இந்தப் பிரிவுக்குக் கட்டாயமாக்கப்படும்.
லாரி, பேருந்துகளுக்கான பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள்
வர்த்தக வாகனங்களில் விபத்துகளைத் தவிர்க்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நடைமுறைகள்; ஜன.2027 முதல் புதிதாகத் தயாரிக்கப்படும் லாரி மற்றும் பேருந்து மாடல்களில் மேம்பட்ட அவசரகால பிரேக்கிங் அமைப்புகள் (AEBS) பொருத்தப்படவுள்ளன.
பார்வைப் புலப்படாத இடங்களைக் கண்டறியும் அமைப்பு (Blind-spot information systems), வாகனம் நகரும்போது எச்சரிக்கும் அமைப்பு (Moving-off information systems), ஓட்டுநரின் தூக்கம் மற்றும் சோர்வைக் கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு (Driver-drowsiness detection and warning systems), பாதையிலிருந்து விலகும்போது எச்சரிக்கும் வசதி (Lane-departure warning systems), அக்.1, 2027 முதல் லாரிகளுக்கான திருத்தப்பட்ட பிரேக்கிங் தேவைகள் மற்றும் வளைவுகளில் வாகனக் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கும் மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு (ESC) கட்டாயமாக்கப்படவுள்ளது.
வெஹிக்கிள் டூ வெஹிக்கிள் (V2V)
புதிதாகத் தயாரிக்கப்படும் வாகனங்களில், அக்.1, 2028 முதல் வாகனங்களுக்கு இடையேயான (Vehicle-to-Vehicle - V2V) நேரடித் தகவல் தொடர்பை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இத்தொழில்நுட்பம், சாலையில் செல்லும் வாகனங்கள் தங்களின் வேகம், இருப்பிடம் & பயணிக்கும் திசை போன்ற தகவல்களை ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ள வழிவகுக்கும்.
இது அருகிலுள்ள வாகனங்களை பற்றிய கூடுதல் விழிப்புணர்வை வழங்கி, நவீன அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்குத் துணையாகச் செயல்படும். தற்போது இந்த AEBS & பாதுகாப்பு முன்மொழிவுகள் வரைவு நிலையிலேயே உள்ளன. பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கலந்தாலோசனை செயல்முறைகளின் முடிவிலேயே இதன் இறுதி நடைமுறைத் தேதிகள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

