மாருதி விக்டோரிஸுக்கு செக் வைக்க ஹூண்டாய், ஹோண்டா, ரெனால்ட் களமிறக்கும் 3 புதிய SUV-கள்!
Upcoming Mid-size SUV : இந்தியாவின் மிட்-சைஸ் SUV மார்க்கெட்டில் மாருதி சுசுகி விக்டோரிஸின் வெற்றிக்கு சவால் விடும் வகையில் ஹூண்டாய், ஹோண்டா, மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் மூன்று புதிய மாடல்களைக் களமிறக்க உள்ளன.

Upcoming Mid-size SUV
இந்தியாவின் மிட்-சைஸ் SUV மார்க்கெட்டில் சக்கைப்போடு போடும் மாருதி சுசுகி விக்டோரிஸுக்கு கடுமையான போட்டியைத் தர, மூன்று புதிய SUV மாடல்கள் களமிறங்க உள்ளன. ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, மற்றும் ரெனால்ட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இந்த புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. அறிமுகமான வெறும் 8 மாதங்களில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை விக்டோரிஸ் படைத்துள்ளது. தற்போது மாருதியின் அதிகம் விற்பனையாகும் SUV மாடல்களில் இதுவும் ஒன்றாகும். மாதம் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி, மிட்-சைஸ் SUV பிரிவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், டாடா சியரா, ரெனால்ட் டஸ்டர், நிசான் டெக்டன் போன்ற மாடல்கள் இந்த பிரிவில் விக்டோரிஸின் முக்கியப் போட்டியாளர்கள். விக்டோரிஸின் இந்த வளர்ச்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2026 தீபாவளி சீசனில் ஹூண்டாய் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இதனுடன், ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் ஆகியவையும் சந்தைக்கு வரவிருக்கின்றன.
July 2026 Sales: மெகா விற்பனை செய்த மாருதி சுசுகி.. எந்த மாடல்களுக்கு அதிக டிமாண்ட் தெரியுமா?
ஹூண்டாய் பேயோன் அடிப்படையில் ஒரு புதிய SUV
ஹூண்டாய் உருவாக்கி வரும் இந்த புதிய மிட்-சைஸ் SUV-க்கு தற்போதைக்கு 'BC4i' என்று ஒரு கோட் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4.18 மீட்டர் நீளம் கொண்ட இந்த மாடல், உலக சந்தையில் உள்ள 'பேயோன்' என்ற காம்பாக்ட் கிராஸ்ஓவர் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும். பெட்ரோல் வேரியண்ட்டில் ஹூண்டாயின் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், ஃபேக்டரி-ஃபிட்டட் CNG கிட் ஆப்ஷனும் கிடைக்கலாம். இந்த SUV, கிரெட்டாவிற்கு ஒரு படி கீழே உள்ள மாடலாக சந்தையில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
2026-ல் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெரிய டிசைன் மாற்றங்கள் இருக்காது. ஆனால், சில ஸ்டைலிங் அப்டேட்களும், புதிய அம்சங்களும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அப்படியே தொடரும் எனத் தெரிகிறது. 121 BHP பவரை வழங்கும் இந்த இன்ஜினுடன், தற்போதைய தொழில்நுட்ப அம்சங்களும் அப்படியே இருக்கலாம். புதுப்பிக்கப்பட்ட முன்பக்கம், புதிய LED ஹெட்லேம்ப் டிசைன், மற்றும் மாற்றப்பட்ட பம்பர் போன்றவை எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்டில் வரலாம். காரின் உள்ளே புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி, மேம்படுத்தப்பட்ட கேபின் ட்ரிம், மற்றும் புதிய டச்ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட்
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரெனால்ட் டஸ்டரின் ஹைப்ரிட் வெர்ஷனும் தீபாவளி சமயத்தில் அறிமுகமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.4 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்படும். இந்த பவர்டிரெய்ன் சுமார் 160 BHP ஒருங்கிணைந்த பவரை வழங்கும். நகரப் பயணங்களில் 80% வரை எலக்ட்ரிக் மோடில் பயணிக்க முடியும் என்று ரெனால்ட் கூறுகிறது. 8-ஸ்பீடு மல்டி-மோட் DHT (Dedicated Hybrid Transmission) கியர்பாக்ஸ் இதில் இடம்பெறும்.
மிட்-சைஸ் SUV பிரிவில் போட்டியை மேலும் வலுப்படுத்தவே இந்த மூன்று மாடல்களும் வருகின்றன. மாருதி விக்டோரிஸின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு, இந்த புதிய கார்களின் வருகை வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய தேர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

