- Home
- Auto
- 696 கி.மீ மைலேஜ்: எலக்ட்ரிக் டூ ஸ்ட்ராங் ஹைப்ரிட் வரை; அக். 12-ல் அறிமுகமாகும் 5 மாஸ் கார்கள்!
696 கி.மீ மைலேஜ்: எலக்ட்ரிக் டூ ஸ்ட்ராங் ஹைப்ரிட் வரை; அக். 12-ல் அறிமுகமாகும் 5 மாஸ் கார்கள்!
அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் 5 முக்கிய கார்கள். வால்வோ முதல் ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் வரை புதிய மாடல்களின் விவரங்களை பற்றி பார்போம்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 முக்கிய கார்கள்
இந்தியாவில் அடுத்த வாரம் பல முக்கிய புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்குச் சொகுசு மின்சார கார்கள் முதல் ஹைப்ரிட் எஸ்யூவி வரை பல்வேறு பிரிவுகளில் புதிய தேர்வுகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, வால்வோ, டொயோட்டா, ஆடி மற்றும் ரெனோ ஆகிய முன்னணி நிறுவனங்களின் இந்த வார அறிமுகங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. சில மாடல்கள் ஏற்கெனவே வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள நிலையில், இந்தியாவுக்கான விலை மற்றும் வசதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ள அந்த முக்கிய மாடல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வால்வோ EX90 (Volvo EX90)
வால்வோ நிறுவனத்தின் பிரீமியம் மின்சார எஸ்யூவியான EX90, வரும் திங்கட்கிழமை (அக். 12) இந்தியாவில் அறிமுகமாகிறது. 3 வரிசை இருக்கைகளைக் கொண்ட இந்தக் கார், அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை விரும்பும் குடும்ப வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்வோவின் சர்வதேச மின்சார கார் வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் மாடலாக இது திகழ்கிறது.
சிறப்பம்சங்கள் - இதில் 106kWh பேட்டரி மற்றும் இரண்டு மின்மோட்டார்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 456 எச்பி சக்தியையும், 670 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை முறையின்படி 625 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் விலை மற்றும் வேரியண்ட் விவரங்கள் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளன.
வால்வோ ES90 (Volvo ES90) EX90
எஸ்யூவியுடன் சேர்த்து வால்வோவின் ES90 மின்சார செடான் காரும் திங்கட்கிழமை (அக். 12) இந்தியாவில் களமிறங்குகிறது. வால்வோ நிறுவனம் தனது சொகுசு செடான் கார் பிரிவில் மீண்டும் தீவிரமாகக் கவனம் செலுத்த இந்த மாடல் பெரிதும் உதவும். வழக்கமான எஸ்யூவிகளிலிருந்து மாறுபட்ட தோற்றத்தையும் பிரீமியம் பயண அனுபவத்தையும் விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.
சிறப்பம்சங்கள் - இதன் சர்வதேச மாடலில் 106kWh பேட்டரி கொண்ட இரட்டை மின்மோட்டார் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது 456 ஹெச்பி சக்தியையும் 670 என்எம் டார்க்கையும் தருகிறது. WLTP முறையின்படி அதிகபட்சமாக 696 கி.மீ வரை பயணிக்கக் கூடியது. இந்திய மாடலுக்கான விலை மற்றும் டெலிவரி விவரங்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும்.
டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்
டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் காரான கிளான்ஸாவின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அக். 14 அன்று அறிமுகமாகவுள்ளது. மாருதி சுஸுகி பலேனோவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காரில், புதிய முன்பக்க வடிவமைப்பு, மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெறுகின்றன. அதிக இடவசதியுடன் கூடிய ஸ்டைலான ஹேட்ச்பேக் காரை எதிர்நோக் காத்திருப்போருக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
சிறப்பம்சங்கள் - தற்போதைய மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய எஞ்சின் மாற்றங்கள் அல்லது கூடுதல் நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த முழுத் தகவல்களும் அக். 14 அன்று வெளியாகும்.
ஆடி Q3 (New-Gen Audi Q3)
ஆடி நிறுவனத்தின் புதிய தலைமுறை Q3 எஸ்யூவி அக்.16 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. முந்தைய மாடலைக் காட்டிலும் மிகவும் நவீன தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதில், இரண்டாகப் பிரிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் அமைப்பு, பெரிய முன்பக்க கிரில் மற்றும் பின்புறத்தை இணைக்கும் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது சந்தையில் பிஎம்டபிள்யூ X1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.
சிறப்பம்சங்கள் - இந்திய மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 204 எச்பி சக்தியை வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ (Quattro) ஆல் வீல் டிரைவ் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 12.8 அங்குல தொடுதிரை, 11.9 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட்
ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் பதிப்பு அக். 17 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஏற்கெனவே டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் பேசப்பட்டு வரும் டஸ்ட்டர் வரிசையில், இந்தப் புதிய ஹைப்ரிட் பதிப்பு எரிபொருள் சிக்கனத்தையும் அபார செயல்திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்குச் சரியான எஸ்யூவியைத் தேடுவோருக்கு இது முக்கிய வரவாக இருக்கும்.
சிறப்பம்சங்கள் - சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 2 மின்மோட்டார்கள் மற்றும் 1.4kWh பேட்டரி இணைந்து செயல்படுகின்றன. இந்த அமைப்பு 160 எச்பி சக்தியை அளிக்கிறது. நகரப் பயணங்களில் அதிக நேரம் மின்சாரத்திலேயே இயங்கும் இதன் மூலம், லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ் கிடைக்கும் என்று ரெனோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு - அடுத்த வாரம் வரவிருக்கும் இந்த புதிய கார்களில், வால்வோ EX90 மற்றும் ES90 ஆகியவை சொகுசு மின்சார வாகனப் பிரிவில் மகுடம் சூடத் தயாராகின்றன. மறுபுறம், டொயோட்டா கிளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் தேர்வாகவும், ஆடி Q3 சொகுசு எஸ்யூவி பிரிவிலும் கலக்கவுள்ளன. மேலும், ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் எரிபொருள் மிச்சத்தையும் உயர் செயல்திறனையும் ஒருங்கே விரும்புவோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக் காத்திருக்கிறது. கார்களின் அதிகாரப்பூர்வ விலைகள் வெளியானதும், உங்களது பயணத் தேவைக்கு ஏற்ற சிறந்த காரைத் தேர்ந்தெடுக்க இது சரியான தருணமாக இருக்கும்.

