செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவது எப்படி? முழுமையான மற்றும் எளிமையான வழிகாட்டி இதோ!
How to Buy Second Hand Car: செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வெளிப்புற அழகை மட்டும் பார்க்காமல், இன்ஜின் கண்டிஷன், ஆவணங்கள், சர்வீஸ் ஹிஸ்டரி மற்றும் ஆக்சிடென்ட் விவரங்களை சரிபார்க்க வேண்டும். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவது எப்படி?
கம்மி பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் கார் ஒரு சிறந்த தேர்வாகும். புதிய காரை விடக் குறைவான விலையில் கிடைப்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய பிளஸ் ஆகும். ஆனால், வெளிப்புறப் பளபளப்பையும் அழகையும் மட்டும் பார்த்துவிடடு காரை வாங்கினால், அதன் பிறகு பழுதுபார்ப்பதற்காகவே நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு முன்பு காரின் தரம், இன்ஜின், ஆவணங்கள் மற்றும் ஆக்சிடென்ட் ஹிஸ்டரி அனைத்தையும் நாம் கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும்.
பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் ஏற்ற காரைத் தேர்ந்தெடுங்கள்
கார் வாங்குவதற்கு முன்பு, நமக்கு எந்த மாதிரி கார் தேவை, எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். காரின் விலையை மட்டும் வைத்து பட்ஜெட்டை நிர்ணயிக்கக் கூடாது. இன்சூரன்ஸ், சர்வீஸ், ஆர்சி (RC) பெயர் மாற்றம், வரி மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய பழுதுபார்ப்புச் செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினசரி பயணம் மற்றும் குடும்பத்தின் தேவைக்கேற்ப பெட்ரோல், டீசல், சிஎன்ஜி (CNG) அல்லது எலக்ட்ரிக் கார் என உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கலாம். காரைச் சோதிக்கும்போது, பாடியில் பெரிய கீறல்கள், துருப்பிடித்தல், பெயிண்ட் சரியாக இல்லாமல் இருப்பது மற்றும் விபத்துக்குள்ளானதற்கான அடையாளங்கள் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
கதவுகள், பானட், டிக்கி அனைத்தையும் திறந்து மூடிச் சரிபார்த்து, அவைகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். காரின் உட்பகுதியையும் சோதிக்க வேண்டும்; சீட்டுகளின் தரம், ஏசி, மியூசிக் சிஸ்டம், பவர் விண்டோஸ், ஹெட்லைட்ஸ் மற்றும் இண்டிகேட்டர்ஸ் போன்ற அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பகுதிகளைச் சரிபாருங்கள்
இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பகுதிகளைச் சரிபார்ப்பது, பழைய காரின் உண்மையான தரத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் அவசியமாகும். காரைப் பற்றி தொழில்நுட்ப ரீதியாக உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையான மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்வது நல்லது. இன்ஜின், கிளட்ச், கியர்பாக்ஸ், பிரேக், சஸ்பென்ஷன் மற்றும் பேட்டரி ஆகியவற்றின் தரத்தைச் சோதிக்க வேண்டும். இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது வித்தியாசமான சத்தம் வருகிறதா, புகை வருகிறதா, ஆயில் லீக் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
டெஸ்ட் டிரைவ் மிகவும் முக்கியம்
கார் வாங்குவதற்கு முன்பு கண்டிப்பாக டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும். முடிந்தால் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை ஓட்டிப் பார்த்து, இன்ஜின், கியர்மாறுவது, ஸ்டீயரிங் மற்றும் பிரேக் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைச் சோதிக்க வேண்டும். ஓட்டும்போது வித்தியாசமான சத்தம், அதிகப்படியான அதிர்வு, ஸ்டீயரிங் ஒரு பக்கமாக இழுப்பது அல்லது பிரேக் பிடிக்கும்போது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளாமல் காரை வாங்க முடிவு செய்யாதீர்கள்.
ஆவணங்களை சரிபாருங்கள்
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகமிக முக்கியமான செயலாகும். காரின் ஆர்சி (RC) புக், இன்சூரன்ஸ், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) மற்றும் சர்வீஸ் ரெக்கார்ட்ஸ் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். காருக்கு ஏதாவது கடன் (Loan) அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முன்பு லோன் வாங்கியிருந்தால், அதை முழுமையாகக் கட்டிமுடித்துவிட்டார்களா மற்றும் அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆர்சி புத்தகத்தில் உள்ள இன்ஜின் எண்ணும், சேசிஸ் எண்ணும் காரில் உள்ள எண்ணுடன் சரியாகப் பொருந்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும். சர்வீஸ் ரெக்கார்ட்ஸ் இருந்தால், காரை முறையான இடைவெளியில் சர்வீஸ் செய்துள்ளார்களா மற்றும் முன்பு என்னென்ன பழுதுகள் பார்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
டோமீட்டர் ரீடிங்
கார் எத்தனை கிலோமீட்டர் ஓடியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஓடோமீட்டர் ரீடிங்கைப் பார்க்கலாம். ஆனால், மீட்டரில் காட்டுவதைக் மட்டுமே முழுமையாக நம்புவது தவறாகும். சர்வீஸ் ரெக்கார்ட்ஸில் உள்ள ரீடிங்குடன் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் சரியாகப் பொருந்துகிறதா என்று சோதிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால், இன்னும் தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும்.
கார் முன்பு எப்போதாவது பெரிய விபத்தில் சிக்கியுள்ளதா என்றும் பார்க்க வேண்டும். வெளியில் புதிதாகப் பெயிண்ட் அடித்துள்ளனர் என்பதற்காக மட்டும் அது விபத்துக்குள்ளான கார் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல், பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கார் எந்த விபத்தும் நடக்காத கார் என்றும் நினைத்துவிடக் கூடாது. தேவைப்பட்டால், ஒரு நிபுணரின் உதவியோடு பாடியையும் முக்கியமான பாகங்களையும் சோதித்துக்கொள்ளுங்கள்.
சந்தை விலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
ஒரே மாடல், ஒரே ஆண்டில் வெளிவந்த கார்களின் விலையைப் பல ஆன்லைன் தளங்களில் சோதித்துப் பார்க்கவும். சந்தை விலையைக் காட்டل மிகக் குறைந்த விலைக்குக் காரை விற்றால், அதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும். காரின் வயது, ஓடிய தூரம், சர்வீஸ் வரலாறு, விபத்து பின்னணி மற்றும் தற்போதைய தரம் ஆகியவை விலையைப் பாதிக்கும். விலை குறைவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவசரப்பட்டு வாங்கிவிடக் கூடாது.





