வருட கடைசியில் புது பைக்கை வாங்குவது லாபமா? நட்டமா? மக்களே உஷார்.!
டிசம்பர் மாதத்தில் பைக் வாங்கினால் அதிக தள்ளுபடிகள் மற்றும் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், வாங்கிய அடுத்த மாதமே அது முந்தைய ஆண்டு மாடலாகி, மறுவிற்பனை மதிப்பைக் குறைத்துவிடும்.

டிசம்பர் பைக் டீல்ஸ்
இந்த ஆண்டு முடிவை நெருங்க உள்ளது. இந்த டிசம்பர் மாதம், புதிய பைக்கை (மோட்டார் சைக்கிள்) வாங்க நினைப்பவர்களுக்கு எப்போதும் சிறப்பு காலமாகவே காணப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலான இருசக்கர வாகன நிறுவனங்களும், டீலர்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கத் தொடங்குகின்றனர். ஷோரூம்களில் இறுதி சலுகை பலகைகள், தள்ளுபடி அறிவிப்புகள் மற்றும் விற்பனை குழுக்களின் பரபரப்பு என வித்தியாசமான சூழல் உருவாகிறது. ஆண்டு முடிவதற்குள் ஸ்டாக்குகளை கிளியர் செய்ய வேண்டும் என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
டிசம்பரில் பைக் வாங்கினால் மிகப்பெரிய நன்மை, கிடைக்கும் அதிக தள்ளுபடிகள் தான். இந்த ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், குறைந்த முன்பணம் திட்டங்கள், பூஜ்ஜிய-செலவு இஎம்ஐ வசதி, இலவசம் அல்லது தள்ளுபடி காப்பீடு மற்றும் ஆக்சஸரீஸ் பேக்கேஜ்கள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. மெதுவாக விற்பனையாகும் வேரியண்ட்களில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
பைக் தள்ளுபடி
மேலும், ஜனவரியில் ஏற்படும் விலை உயர்வுக்கு முன் பைக் வாங்கும் வாய்ப்பு டிசம்பரில் கிடைக்கிறது. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டின் தொடக்கத்தில் உள்ளீட்டு செலவுகள் அல்லது மாடல் அப்டேட்கள் காரணமாக விலையை உயர்த்துவார்கள். அதற்கு முன்பே டிசம்பரில் வாங்கினால், குறைந்த எக்ஸ்-ஷோரூம் விலையில் பைக்கைப் பெற முடியும். இதனால் நீண்ட காலம் பைக் பயன்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சேமிப்பாக அமையும்.
அதே நேரத்தில், டிசம்பரில் பைக் வாங்குவதற்கு சில தீமைகளும் உள்ளன. இந்த மாதத்தில் வாங்கப்படும் பைக், அடுத்த மாதம் முதல் முந்தைய ஆண்டு மாடலாகக் கருதப்படும். நீங்கள் பைக்கை குறைவாக பயன்படுத்தினாலும், மறுவிற்பனை செய்யும் போது அது ஒரு வருடம் பழையதாக மதிப்பிடப்படும். இதனால் ரீசெல் விலை மற்றும் காப்பீட்டு மதிப்பு சற்று குறைய வாய்ப்புள்ளது.
பைக் வாங்குதல் டிப்ஸ்
மேலும், புதிய மாடல் ஆண்டு அறிமுகமாகும் புதிய நிறங்கள் அல்லது சிறிய அம்ச மேம்பாடுகள் டிசம்பரில் வாங்கினால் கிடைக்காமல் போகலாம். ஆண்டு இறுதியில், குறிப்பிட்ட நிறங்கள் அல்லது வேரியண்ட்கள் மட்டுமே ஷோரூம்களில் இருப்பதால், உங்களுக்கான ஆப்ஷன்களும் குறைவாகவே இருக்கும்.
எனவே, டிசம்பரில் பைக் வாங்கும் போது தள்ளுபடியை மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், இறுதி ஆன்-ரோடு விலை, காப்பீட்டு விவரங்கள், இஎம்ஐ விதிமுறைகள், டெலிவரிக்கு முன் வாகன சோதனை (PDI) ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும். நீங்கள் பைக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், டிசம்பர் மதம் ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஆனால் புதிய அம்சங்கள் மற்றும் உயர்ந்த மறுவிற்பனை மதிப்பு முக்கியமென நினைத்தால், ஜனவரி மாடலுக்காக காத்திருப்பதும் சரியான முடிவாக இருக்கலாம்.

