- Home
- Auto
- Helmet: உயிர் காக்கும் ஹெல்மெட்டுக்கும் ஆயுட்காலம் உண்டு தெரியுமா? தரமானதா கண்டுபிடிக்க 3 எளிய வழிகள்!
Helmet: உயிர் காக்கும் ஹெல்மெட்டுக்கும் ஆயுட்காலம் உண்டு தெரியுமா? தரமானதா கண்டுபிடிக்க 3 எளிய வழிகள்!
Helmet Safety: புதிய ஹெல்மெட் வாங்கும் போது ISI முத்திரை, சரியான அளவு மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம். மேலும், பழைய ஹெல்மெட்களைத் தவிர்ப்பது, ரசாயனங்கள் கொண்டு சுத்தம் செய்யாமல் இருப்பது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஹெல்மெட்
பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது, டிராஃபிக் போலீஸ் போடும் ஃபைனில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல; அது உங்கள் உயிருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய 'கேரண்டி' . ஆனால், நம்மில் பலர் பணத்தை மிச்சப்படுத்த மலிவு விலை ஹெல்மெட்களை வாங்கி, நம் உயிருடன் விளையாடுகிறார்கள். இந்நிலையில் நீங்கள் புது ஹெல்மெட் வாங்க திட்டமிட்டிருந்தால் ஹெல்மெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ISI முத்திரையை சரிபார்க்கவும்
ஹெல்மெட் வாங்கும் போது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, அதில் ISI முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதுதான். இந்த முத்திரை ஒரு சாதாரண லோகோ அல்ல. அந்த ஹெல்மெட், இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) நடத்திய மிகக் கடுமையான பாதுகாப்பு சோதனைகளில் (Safety Tests) தேர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கான அதிகாரப்பூர்வச் சான்று இது.
தரம் குறியீடு
இந்தியாவில் இருசக்கர வாகன ஹெல்மெட்களுக்கு IS 4151 என்ற தரக் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் ஹெல்மெட்டில் இந்தக் குறியீடு இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும். இப்போதெல்லாம், சாலையோரங்களில் விற்கப்படும் மலிவு விலை ஹெல்மெட்களில் போலி ISI ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். உண்மையான தரமான ஹெல்மெட்டைக் கண்டறிய, அதில் ஒரு தனித்துவமான உரிம எண் (Unique License Number) இருக்கும். இந்த எண்ணை நீங்கள் BIS-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் உள்ளீடு செய்து, அந்த ஹெல்மெட் உண்மையானதா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
சரியான அளவு மற்றும் ஃபிட்டிங்
பலர் மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிராண்டட் ஹெல்மெட்களை வாங்குவார்கள், ஆனால் தவறான அளவைத் தேர்ந்தெடுப்பார்கள். நினைவில் கொள்ளுங்கள், சரியான அளவு இல்லையென்றால், எவ்வளவு விலை உயர்ந்த ஹெல்மெட்டாக இருந்தாலும் அது உங்கள் பாதுகாப்பிற்குச் சிறிதும் உதவாது.
ஃபிட்டிங்கை எப்படிக் கண்டறிவது?
ஹெல்மெட்டைத் தலையில் அணிந்து பாருங்கள். பிறகு தலையை லேசாக இடது-வலது மற்றும் மேல்-கீழாக அசைக்கவும். ஹெல்மெட் தலையில் எளிதாக அசைந்தால், அந்த அளவு உங்களுக்குப் பெரியது என்று அர்த்தம். ஹெல்மெட் எப்போதும் உங்கள் கன்னங்கள் மற்றும் நெற்றிப் பகுதியில் கச்சிதமாக பொருந்த வேண்டும்.
ஹெல்மெட்டைப் பராமரிப்பதில் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள்!
ஹெல்மெட் வாங்கினால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பலர் ஹெல்மெட்டைப் பராமரிக்கும்போது சில தவறுகளைச் செய்கிறார்கள், இது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இந்தத் தவறுகளிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
செகண்ட் ஹேண்ட் அல்லது பழைய ஹெல்மெட் வேண்டாம்
பணத்தை மிச்சப்படுத்தச் சிலர் பழைய அல்லது பயன்படுத்திய ஹெல்மெட்களை வாங்குவார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஒரு ஹெல்மெட் முன்பு ஒரு சிறிய விபத்தில் சிக்கியிருந்தாலும், அது வெளிப்புறமாகப் பார்க்க நன்றாக இருக்கலாம். ஆனால், விபத்தைத் தடுக்கும் அதன் உள் பாதுகாப்பு அடுக்கு (Safety Layer) ஏற்கனவே சேதமடைந்திருக்கலாம். இதனால் மீண்டும் விபத்து ஏற்பட்டால், அந்த ஹெல்மெட் உங்கள் தலையைக் காக்காது.
கெமிக்கல் மற்றும் எண்ணெயிலிருந்து விலகி இருங்கள்
ஹெல்மெட்டைப் பளபளப்பாக மாற்ற பெட்ரோல், டீசல், தின்னர் அல்லது வேறு எந்தக் கடுமையான ரசாயன கிளீனர்களையும் பயன்படுத்த வேண்டாம். இவை ஹெல்மெட்டின் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் வெளிப்புற உறையை பலவீனப்படுத்திவிடும். ஹெல்மெட்டை சுத்தம் செய்யச் சாதாரண நீரும், மென்மையான சோப்பும் போதுமானது.
காலாவதி தேதியைக் கவனியுங்கள்
ஹெல்மெட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? வெயில், வியர்வை மற்றும் வானிலை மாற்றங்களைத் தாங்குவதால், ஹெல்மெட்டின் உள் மெட்டீரியல் காலப்போக்கில் கெட்டுப்போகத் தொடங்கும். எனவே, ஹெல்மெட் வெளிப்புறமாகப் பார்க்கப் புத்தம் புதியதாக இருந்தாலும், 5 வருடங்களுக்கும் மேலான பழைய ஹெல்மெட்டை மாற்றுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

