- Home
- Auto
- 10-ல் 4 இந்தியர்களின் முதல் தேர்வு எலெக்ட்ரிக் வண்டிதான்; மின்னல் வேகத்தில் வளரும் இ-டூவீலர் புரட்சி!
10-ல் 4 இந்தியர்களின் முதல் தேர்வு எலெக்ட்ரிக் வண்டிதான்; மின்னல் வேகத்தில் வளரும் இ-டூவீலர் புரட்சி!
மாதம் 1.80 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்; பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் டூவீலர்களை நோக்கி இந்தியர்கள் திரள்வது ஏன்? BCG ஆய்வறிக்கையின் அதிரடி புள்ளிவிவரங்கள் இதோ!

மளமளவென எகிறும் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை
இந்திய சாலைகளில் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அமைதியான புரட்சி நடக்கப்போகிறது. உங்க அடுத்த டூவீலர் என்ன? என்று கேட்டால், கிட்டத்தட்ட பாதி இந்தியர்கள் யோசிக்காமல் சொல்லும் ஒரே பதில் எலெக்ட்ரிக் வண்டிதான். பிரபல சர்வதேச நிறுவனமான போஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) வெளியிட்டுள்ள எலெக்ட்ரிக் இன் சார்ஜ் என்ற புதிய ஆய்வறிக்கை, இந்தியர்களின் டூவீலர் கனவு எந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
நம்பர் 1 சந்தை... ஆனால் மனநிலை மாறியது எப்படி?
உலகிலேயே இருசக்கர வாகன விற்பனையில் இந்தியா இன்னமும் அசைக்க முடியாத முதலிடத்தில்தான் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் விற்றுத் தீர்ந்த டூவீலர்களின் எண்ணிக்கை சுமார் 2.21 கோடி. ஆனால், இப்போது ஆச்சரியம் என்னவென்றால் 2024-ல் அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகனம் வாங்கலாம் என நினைத்தவர்கள் 30%. இப்போது அந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 43% ஆக மாறியுள்ளது. எனக்கு எலெக்ட்ரிக் வண்டியே வேண்டாம் என்று ஒதுக்கியவர்களின் எண்ணிக்கை 38%-ல் இருந்து 29% ஆகச் சரிந்துவிட்டது.
பிக்-அப் இருக்காதுப்பா... பழைய கதையெல்லாம் முடிஞ்சு போச்சு!
ஒரு காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே வேகம் போதாது, பிளாஸ்டிக் பாடி, லுக் நல்லா இல்ல என்ற பேச்சு இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். வெறும் 2.7 வினாடிகளில் 0 முதல் 40 கி.மீ வேகத்தை எட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் களத்தில் இறங்கி, பெட்ரோல் வண்டிகளையே மிரள வைக்கின்றன.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அசத்தலான டிசைனை விரும்புவோரின் விகிதம் 30%-லிருந்து 59% ஆக உயர்ந்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் களமிறங்கியதால், பிராண்டுகள் மீதான நம்பிக்கை 28%-லிருந்து 46% ஆக அதிகரித்து உள்ளது. பயன்படுத்திய பிறகு பார்த்தால் பெட்ரோல் செலவு மிச்சம், குறைவான மெயின்டனன்ஸ், டிஜிட்டல் திரைகள், சுலபமான டிரைவிங் என வாடிக்கையாளர்கள் ஏகத்துக்கும் குஷியாகி விடுகிறார்கள்.
மாதம்தோறும் 1.80 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு வெறும் 5.5%-ல் இருந்து 9.9% ஆக மளமளவென உயர்ந்துள்ளது (ஸ்கூட்டர்களில் மட்டும் இது 24.1%!). ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) தகவல்படி, சமீபத்தில் இதன் ஊடுருவல் 11.58%-ஐத் தொட்டுள்ளது. மாதம் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 1.80 லட்சம் புதியவர்கள் எலெக்ட்ரிக் வாகனக் குடும்பத்தில் இணைகிறார்கள். சுமார் 1,600 வாடிக்கையாளர்களிடம் பேசிய BCG, புதிய இந்தியர்களின் தேவைகளை வைத்து 2 புதுப்பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது:
இந்திய சாலைகளில் அமைதியான புரட்சி!
டிரிப் மேக்சிமைசர்ஸ் (Trip Maximizers): ஜெட் வேகத்தில் வளரும் உணவு டெலிவரி மற்றும் குவிக்-காமர்ஸ் (Quick-commerce) டெலிவரி ஊழியர்கள். இவர்களுக்குத் தேவை குறைந்த செலவு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நெரிசலில் புகுந்து செல்லும் வேகம்! (இந்திய குவிக்-காமர்ஸ் சந்தை 0.75 பில்லியன் டாலரிலிருந்து 8 பில்லியன் டாலராக விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது).
ரிலையபிள் யெட் ரிஃபைண்ட் (Reliable yet Refined): சிறு நகரங்களைச் சேர்ந்த ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள். குண்டும் குழியுமான சாலைகளையும் தாங்க வேண்டும், நீண்ட தூரமும் ஓட வேண்டும், அதேசமயம் காலேஜுக்கு கெத்தாக ஓட்டிச்செல்லும் ஸ்டைலும் வேண்டும் என எதிர்பார்க்கும் கூட்டம்!
நிறுவனங்களுக்கு வைக்கப்படும் செக்!
ஆனால் வாடிக்கையாளர்களின் இந்த ஆர்வத்தை முழு விற்பனையாக மாற்ற நிறுவனங்கள் இன்னும் சில விஷயங்களில் முழு நம்பிக்கை தர வேண்டியுள்ளது. ஒரு சார்ஜில் நிஜமாகவே எவ்வளவு தூரம் போகும்? பழுது ஏற்பட்டால் உடனே சரிசெய்ய முடியுமா? பழைய பெட்ரோல் வண்டிகளைப் போல எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரியான உத்தரவாதம் கொடுத்துவிட்டால் போதும் இந்தியாவின் ஒட்டுமொத்த சாலைகளும் எலெக்ட்ரிக் மயமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது!





