Gold: இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கம் செட் ஆகாது! பண நெருக்கடி வரும்! உஷார் மக்களே!
Gold: ஒரு சில ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது என ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. எந்தெந்த ராசிகள்? ஏன் தங்கம் அணியக்கூடாது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது?
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல; அது பாரம்பரிய பொருளாகவும், அந்தஸ்துமிக்க பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஜோதிடசாஸ்திரத்தின்படி லட்சுமி தேவியின் வடிவமாக தங்கம் பார்க்கப்படுகிறது. நவக்கிரகங்களில் சுப கிரகமாகவும், தனகாரகனாகவும் விளங்கும் 'குரு பகவானின்' ஆதிக்கத்தைக் கொண்டது தங்கம். தங்கம் சிலருக்கு அதிர்ஷ்ட மழையைக் பொழியும். அதே தங்கம் சிலருக்கு தேவையற்ற மன உளைச்சலையும், பண நெருக்கடியையும் தந்துவிடும்.
ஜோதிடசாஸ்திரத்தின்படி எந்தெந்த ராசிக்காரர்கள் தங்க நகைகளைத் தவிர்ப்பது நல்லது? ஏன் காலில் தங்கம் அணியக்கூடாது? என்பது போன்ற ஆன்மீகத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள லக்னம் மற்றும் ராசி நாதனுக்கு (ராசி அதிபதி), குரு பகவான் பகை கிரகமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்கம் அணிவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி ஆடம்பர நாயகனான சுக்கிரன் ஆவார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவகுருவான வியாழனுக்கும் (குரு), அசுரகுருவான சுக்கிரனுக்கும் இடையே பகை உணர்வு உண்டு. எனவே, ரிஷப ராசியினர் அதிகளவில் தங்கம் அணியும் போது, அது அவர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற தேக்க நிலையை உருவாக்கலாம். குறிப்பாக, எதிர்பார்த்த பண வரவில் தடைகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், இயல்பிலேயே புத்தி கூர்மை உடையவர்கள். இருப்பினும், புதனுக்கும் குருவிற்கும் இடையே உள்ள கிரக நிலைகளின்படி இணக்கம் குறைவு. மிதுன ராசியினர் தங்கம் அணியும் போது, சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து பணத்தை இழக்க நேரிடலாம். மனக்குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கன்னி
மிதுனத்தை போலவே கன்னி ராசியின் அதிபதியும் புதன் பகவான் தான். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கைகளிலோ அல்லது கழுத்திலோ அளவுக்கு அதிகமாகத் தங்கம் அணியும் போது, அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியை முடக்கலாம். சேமிப்பு கரைந்து, வீண் செலவுகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
துலாம்
சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த மற்றொரு ராசி துலாம். பொதுவாகவே துலாம் ராசிக்காரர்கள் அழகியல் உணர்வு மிக்கவர்கள், நகைகளை விரும்புபவர்கள். ஆனால், ஜோதிடப்படி தங்கம் இவர்களுக்கு அசுப பலன்களைத் தரக்கூடும். குறிப்பாக, துலாம் ராசியினர் இடுப்பு பகுதிக்குக் கீழே அல்லது கால்களில் தங்கத்தை நெருங்கவே விடக்கூடாது.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி நீதிமானான சனி பகவான் ஆவார். சனிக்கும் குருவிற்கும் பெரிய அளவில் பகை இல்லை என்றாலும், கும்ப ராசியினருக்கு தங்கம் அவ்வளவாக ராசியான உலோகமாக இருப்பதில்லை. இவர்கள் தங்கம் அணியும் போது, தேவையற்ற மருத்துவ செலவுகள் அல்லது உறவுகளுக்குள் விரிசல் போன்ற எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.
காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது?
நம் ஊர்களில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், காலில் தங்கக் கொலுசு அணிவதில்லை. வெள்ளி மட்டுமே அணிவார்கள். இதற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான ஆன்மீக மற்றும் அறிவியல் ரகசியம் ஒளிந்துள்ளது.
ஆன்மீகக் காரணம்: தங்கம் என்பது மகா லட்சுமியின் வடிவமாகவும், குருவின் அம்சமாகவும் போற்றப்படுகிறது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் நம் கால்களில் தங்கத்தை அணியும் போது, அது அந்த தெய்வீக ஆற்றலை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் செல்வ வளம் குறைந்து வறுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.
அறிவியல் காரணம்: வெள்ளி உலோகம் மனித உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தங்கம் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தலைப் பகுதிக்கு தங்கமும், கால் பகுதிக்கு வெள்ளியும் அணியும் போது தான் உடலின் ஆற்றல் சமநிலையில் (Energy Balance) இருக்கும். இதன் காரணமாக சிலர் தங்கம் அணிவதில்லை.
எந்நெந்த ராசியினர் தங்கம் அணியலாம்?
நெருப்பு மற்றும் நீர் தத்துவத்தை கொண்ட ராசிகளுக்கு தங்கம் எப்போதும் அமோக பலன்களையே தரும். அதாவது மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்கம் அணிந்தால், அவர்களின் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம், சமூகத்தில் உயரிய பதவி மற்றும் புகழை பெற குருவின் அருள் இவர்களுக்குத் தங்கத்தின் மூலம் எளிதாகக் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

