Gold: தங்கமும், பணமும் வீட்டில் மலை போல குவிய வேண்டுமா? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது இதுதான்!!
தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். 12 ராசிக்காரர்களும் எந்த நாளில் தங்கம் வாங்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் அதிபதி குரு:
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
லட்சுமி கடாட்சம்:
பிறந்த ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
நகை வாங்கும் யோகம்:
அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் நம்முடைய வீட்டில் தங்கம் எப்போதும் தங்கும். நகை வாங்கும் போது பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்கள் பார்த்து வாங்க வேண்டும். சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினால் தங்கம் மேன்மேலும் வாங்கும் யோகம் வரும்.
தடையின்றி தங்கம் சேர:
அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.
நகை வாங்க நல்ல நாட்கள்:
மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் நகை வாங்கலாம்.
தங்கம் அதிகம் சேர:
துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.