- Home
- Astrology
- Astrology: செவ்வாய் பகவான் வீட்டில் குடியேறிய சூரிய பகவான்.! சூரிய பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஜொலிக்கப்போகும் ராசிகள்.!
Astrology: செவ்வாய் பகவான் வீட்டில் குடியேறிய சூரிய பகவான்.! சூரிய பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஜொலிக்கப்போகும் ராசிகள்.!
Surya Peyarchi November 16 2025 Predictions: நவம்பர் 16, 2025 அன்று சூரிய பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2025 நவம்பர் 16:
ஜோதிடத்தில் சூரிய பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். இதுவரை துலாம் ராசியில் பயணித்து வந்த அவர் நவம்பர் 16, 2025 அன்று பிற்பகல் 1:44 மணியளவில் செவ்வாயின் ஆளுகைக்கு உட்பட்ட விருச்சிக ராசிக்கு நுழைய இருக்கிறார். துலாம் ராசி சூரிய பகவானுக்கு நீச்ச ராசியாக கருதப்படுகிறது.
துலாம் ராசியில் இதுவரை பலவீனமான நிலையில் பயணித்து வந்த அவர், தற்போது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சூரிய பகவானின் ராசி மாற்றத்தை பொறுத்தே தமிழ் மாதங்கள் பிறக்கின்றன என்ற அடிப்படையில் கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது.
சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் பிற யோகங்கள்
விருச்சிக ராசியில் ஏற்கனவே புதன் பகவான் இருப்பதால் அவருடன் இணைந்து புதாத்திய ராஜயோகத்தையும், செவ்வாய் பகவானுடன் இணைந்து மங்களாதித்ய ராஜயோகம் போன்ற சுப யோகங்களும் ஏற்படுகின்றன. சூரிய பகவானின் விருச்சிக ராசி மாற்றத்தால் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் கிடைக்க உள்ளது என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் சிம்ம ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும். வீடு, நிலம், சொத்து, மனை, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசியின் மூன்றாவது வீடான சகோதரர் மற்றும் தைரிய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தகவல் தொடர்பு, ஊடகம், கல்வி, விளையாட்டுத்துறைகளில் இருப்பவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரலாம். தொழிலில் அல்லது புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம்
சூரிய பகவான் விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, ஆற்றல், தலைமைப் பண்பு, புகழ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வெற்றியைக் காண்பீர்கள். அரசாங்கத் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கு சூரியன் பதினோராவது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய தொடர்புகள், நண்பர்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் வசதி, வாய்ப்புகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)